வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று 1079 ஆவது நாளாக தொடர்ந்து வருகின்றது.

இன்று இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நீதி மறுக்கப்பட்ட நாட்டில் சுதந்திர தின கொண்டாட்டம் எதற்கு என்கின்ற தொனிப்பொருளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சி கந்தசாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள மக்கள் இரவோடு இரவாக ஓ.எம்.பி அமைத்து இலங்கை அரசு எதைச் சாதிக்க நினைக்கிறது, எங்களுக்கு சர்வதேச விசாரணையே வேண்டும், உள்ளூர் விசாரணை அல்ல வீதியில் நின்று போராடும் தாய்மார்களை மேலும் மேலும் சாவடிக்காதே, சர்வதேசமே இலங்கை அரசை குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தீர்வை எங்களுக்கு வழங்கும்

என்கின்ற பல்வேறு கோஷங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு, ´´எங்கே எங்கே உறவுகள் எங்கே இலங்கை அரசு பொய் கூறாதே´´ என்கின்ற பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.