சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அங்கு தங்கியிருந்த 717 இலங்கையர்களை தற்போதைய நிலையில் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

அதன் பதில் தூதுவர் கே.கே.யோகநாதன் இதனை தெரிவித்துள்ளார். மேலும் 10 மாணவர்கள் இன்று இரவு இலங்கை வரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஹொங்கொங்கை சேர்ந்த ஒருவர் பலியாகி உள்ளார். சீனாவில் உள்ள வுஹான் நகரில் இருந்து திரும்பிய 39 வயதானவருக்கு கொரோனா வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஹாம்போகார்டன் பகுதியை சேர்ந்த அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனளிக்காமல் பலியாகியுள்ளார். அதன்படி, கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவுக்கு வெளியே இடம்பெற்ற இரண்டாவது உயிர் பலியாக இது பதிவாகியுள்ளது.

ஏற்கனவே பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் இந்த வைரஸால் உயிரிழந்திருந்தார். கொரோனா வைரஸால் சீனாவில் மட்டும் இதுவரை 425 பேர் பலியாகி உள்ளனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த வைரஸ் சீனாவில் உள்ள 33 மாகாணத்தில் பரவியுள்ள நிலையில் சீனாவை தவிர மேலும் 24 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.