உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே அறிந்திருந்தும் தகவல்களை தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின்கீழ், கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பமைச்சின் முன்னாள் செயலர் ஹேமசிறி பெர்ணான்டோ, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவை பிணையில் விடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக கொலைக் குற்றம் புரிந்துள்ளதாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவை பிணையில் விடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுல திலகரட்ன இன்று உத்தரவிட்டார்.

தம்மை பிணையில் விடுவிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவால் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு இன்று மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுல திலகரட்ன முன்னிiயில் அழைக்கப்பட்டபோது சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச பிரதி மன்றாடியார் நாயகம் திலீப பீரஸ், சந்தேகநபரை பிணையில் விடுவிப்பது தொடர்பில் ஆட்சேபனை இல்லை என நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

அதன்படி, சந்தேகநபரான ஹேமசிறி பெர்ணான்டோவை இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பிணையிலும் மற்றும் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகள் அடிப்படையிலும் விடுவிக்க மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுல திலகரத்ன உத்தரவிட்டுள்ளார். மேலும் பிணையாளர்கள் கொழும்பு மாவட்டத்தை வசிப்பிடமாக கொண்டவர்களாக இருக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவின்றி சந்தேகநபருக்கு வெளிநாட்டு பயணங்களை தடை செய்த நீதிபதி அவரின் கடவுச்சீட்டை நீதிமன்றிற்கு ஒப்படைக்க வேண்டும் எனவும் இந்த உத்தரவு தொடர்பில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

சாட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதை தவிர்க்குமாறு சந்தேகநபருக்கு அறிவித்த நீதிபதி, ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையன்று இரகசிய பொலிஸின் பணிப்பாளர் முன்னிலையில் ஆஜராகி அறிக்கையிட வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இவ் உத்தரவின் பிரதியொன்றை கொழும்பு நீதவான் நீதிமன்ற பதிவாளருக்கு அனுப்பிவைக்குமாறும் நீதிபதியால் உத்தரவிடப்பட்டுள்ளது.