மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் காயங்களுடன் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வவுணதீவு ஆயித்தியமலை மூன்றாம் கட்டை பகுதியில் வைத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 55வயதான மட்டக்களப்பு, புதூர் 7ம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான தம்பாப்பிள்ளை சிவராசா என்பவரே அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் அடித்துக் கொலை செய்யப்படுள்ளதாக தெரிவித்துள்ள வவுணதீவு பொலிஸார், இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில் இக் கொலைச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்றுகாலை கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களிடம் காவல்துறையினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்தார். காணி பிரச்சினை ஒன்றின் காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கும் என அனுமானிக்க முடிவதாக விசாரணைகளை மேற்கொள்ளும் காவல்துறை உயர் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் சம்பவ தினமான நேற்று இரவு வவுணதீவு, ஆயித்தியமலை வீதியிலுள்ள மூன்றாங் கட்டை பிரதேசத்தில் தனது பண்ணைக்கு சென்றிருந்த நிலையில் இரவு 11 மணி அளவில் பண்ணையில் இருந்து வீதிக்கு வந்தபோது அங்கு இருவர் பதுங்குவதை கண்டு யார் எனவும் கேட்ட போது, அவர்கள் மது அருந்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர், இல்லை நீங்கள் மாடு களவு எடுக்க வந்துள்ளீர்களா என கேட்டபோது அவர்கள் குறித்த உத்தியோகத்தருடன் வாக்குவாத்தில் ஈடுபட்ட நிலையில் இருவருக்கும் இடையில் சண்டை மூண்டதை அடுத்து உத்தியோகத்தர் மீது இருவரும் அங்கிருந்த பொல்லால் தலையில் தாக்கியதை அடுத்து அவர் வீதியில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனை அடுத்து அவரின் உடலை இழுத்து வீதியின் ஓரத்தில் போட்டுவிட்டு இருவரும் தப்பி ஓடியுள்ளனர் என இச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அரிசி ஆலை ஒன்றில் வேலை செய்துவரும் ஆயித்தியமலை தேவாலய வீதயைச் சேர்ந்த 31 வயதுடைய முகமட் அஸ்மி, வவுணதீவு, நாவற்குடா, ஈச்சந்தீவைச் சேர்ந்த குணசேகரன் சுரேந்திரன் என்பவர்களின் பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் உத்தியோகத்தரின் தாக்குதலில் கைது செய்யப்பட்ட முகமட் அஸ்மி, அடிகாயங்கள் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் ஏ.சி. றிஸ்வான் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார். இதனை அடுத்து சடலம் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருவருகின்றனர்.