இங்கிலாந்து டச்சஸ் ருட்லான்ட் அரச பிரதானி பிலிப் புருட், ஜேர்மனியை சேர்ந்த சில்ஷயா ரெப்ரிச், ரயினா மெலோர் ஆகியோரின் குழுவினர் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் ஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேச சபைகளின் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.

இவர்கள் மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினருக்கு பாதுகாப்பு அங்கிகள் ஒரு தொகுதியினை முதல் கட்டமாக மாநகர முதல்வர் எஸ்.சரவணபவன் மற்றும் மாநகர ஆணையாளர் எஸ்.சித்திரவேல் ஆகியோரிடம் மாநகர சபையில் வைத்து கையளித்தனர்.மாநகர சபைக்கு தேவையான ஏனைய தேவைகள் தொடர்பாக எங்களுக்கு கோரிக்கைகள் வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் அதன் அடிப்படையில் தேவையான உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அக்குழுவினர் அச்சந்திப்பில் குறிப்பிட்டனர்.

மட்டக்களப்பு மாநகர சபைக்கு ஏற்கனவே ஜேர்மன் நாட்டு மூனிச் மாநகர சபையினால் வாகனம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் வழங்கியமைக்கு மாநகர முதல்வரினால் நன்றி தெரிவிக்கப்பட்டது.

அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட இங்கிலாந்து டச்சஸ் ருட்லான்ட் மற்றும் ஜேர்மனியை சேர்ந்த அரச பிரதானிகளை வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட பாலர் பாடசாலை மாணவர்களினால் பாசிக்குடாவில் வரவேற்பு வழங்கப்பட்டது. அவர்கள் பிரதானிகளுக்கு மாலை அணிவித்து இலங்கையின் தேசிய கொடியினை கையில் ஏந்தி வரவேற்கப்பட்டனர்.

ஜேர்மன் நாட்டின் நியரம்பேக் மாநகர சபையினால் வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபைகளுக்கு அதிகளவான உதவிகள் வழங்கப்பட்டன. நியுரம்பேக் மாநகர சபையின் உதவிகளுக்கு ஜேர்மனைச் சேர்ந்த அமானோ மற்றும் ஒட்டமாவடி பிரதேச செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் ஆகியோர் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத்திலும் ஜேர்மன் நாட்டின் மாநகர சபைகளின் உதவிகளை மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் வாழைச்சேனை ஓட்டமாவடி பிரதேச சபைகளுகக்கு உதவிகளை ஜேர்மன் நாட்டு பிரதிநிதிகளிடம் பெற்றுக் கொள்ள முயற்சிப்பதாக பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, மாநகர சபையின் உறுப்பினர்கள், ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்கள், தீயனைப்பு படை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்