“13  ஐ ஒழிப்பதே கோத்தாவின் நோக்கம்!”

புளொட் அமைப்பின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் , சமகால அரசியல் நிலை குறித்து  ‘சஞ்சீவிக்காக’ வழங்கிய பிரத்தியேக நேர்காணல் இது.

கே: எதிர்­வ­ரும் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் உங்களது கட்சி சார்­பில் நீங்­க­ளும், மாகா­ண­சபை முன்­னாள் உறுப்­பி­னர் பா.கஜ­தீ­ப­னும் கள­மி­றங்­க­வுள்­ளீர்­கள் எனத் தகவல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன. கஜ­தீ­ப­னுக்கு ஆச­னம் வழங்­கி­யமை தொடர்­பில் தங்­கள் கட்­சி­யின் மூத்த உறுப்­பி­னர்­கள் அதி­ருப்­தி­ய­டைந்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கி­றது. உங்­களது கட்­சிக்­குள் என்­ன­தான்  நடக்­கின்­றது?ப: – கஜ­தீ­பன் கடந்த 6 ஆண்­டு­க­ளாக கட்­சிக்­காக  விசு­வா­ச­மாக வேலை செய்­கின்­றார். மக்­கள் மத்­தி­யில் அவருக்குச் செல்­வாக்கு இருக்­கின்­றது. அவரை நிய­மிப்­ப­தில் எந்­தத் தவ­றும் இல்லை. அண்­மை­யில் எமது கட்­சி­யின் நெருங்­கிய ஆத­ர­வா­ளர்­க­ளு­ட­னான கூட்­டம் எனது வீட்­டில் நடை­பெற்­றது. கஜ­தீ­ப­னது பெயரை எல்­லோ­ரும் ஏக­ம­ன­தா­கப் பிரே­ரித்­தார்­கள். இதற்கு மத்­திய செயற்­கு­ழு­வின் அனு­ம­தி­யைப் பெற்­றுக் கொள்­வோம். கட்­சி­யின் மூத்த உறுப்­பி­னர்­கள் அனைவ­ரும் என்­னி­டம் தனிப்­பட்ட முறை­யில் கஜ­தீ­ப­னையே நிய­மிக்­கு­மாறு கோரியுள்ளார்கள்.

பேசு­வது மட்­டுமே வேலை­யல்ல!

கே: 2019ஆம் ஆண்டு நாடா­ளு­மன்­றத்­தில் ஒரு தடவை மாத்­தி­ரமே நீங்­கள் பேசி­ய­தாக, நாடாளு­மன்ற உறுப்­பி­னர்­கள் தொடர்­பில் மதிப்­பீடு செய்­யும் இணை­யத்­த­ளம் தக­வல் வெளியிட்­டி­ருந்­தது. உங்­க­ளுக்கு பேசு­வ­தற்கு நேரம் ஒதுக்­கித் தரப்­ப­ட­வில்­லையா? அல்­லது நீங்­கள் பேசு­வதைத் தவிர்த்­துக் கொண்டீர்­களா?

ப  -: நாடா­ளு­மன்ற உறுப்பினர் ஒருவருக்கு நாடா­ளு­மன்­றத்­தில் பேசு­வது மாத்­தி­ரம்­தான் கடமை­யல்ல. நாடா­ளு­மன்­றத்­துக்­குள்­ளேயே வெவ்­வேறு கட­மை­கள், சபா மண்­ட­பத்­துக்கு வெளி­யில் உள்­ளன. அர­ச­மைப்பு பேர­வை­யின் நட­வ­டிக்­கைக் குழு­வால் நிய­மிக்­கப்­பட்ட 6 உப­கு­ழு­க்களில் ஒரு குழு­வின் தலை­வ­ராக இருந்து, அந்­தச் செயற்­பா­டு­க­ளைச் செய்­தேன்.

நாடா­ளு­மன்­றத்­தில் உள்ள வேறு குழுக்­க­ளி­லும் செய­லாற்­றி­னேன். உதா­ர­ண­மாக, உயர் பதவிகளுக்­கான தெரி­வுக்­கு­ழு­வில் செய­லாற்­று­கின்­றேன்.
இவற்றுக்கு மேலாக நாடா­ளு­மன்­றத்­தில் பேச நேரம் ஒதுக்­கு­வது, நாடா­ளு­மன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும்  கட்­சி­க­ளின் எண்­ணிக்­கை­யைப் பொறுத்தே அமை­யும். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்புக்கு ஒவ்­வொரு விவா­தத்­தி­லும் சரா­ச­ரி­யாக 45 நிமி­டங்­கள் ஒதுக்­கப்­ப­டும். இந்த 45 நிமி­டத்தை 16 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும், இப்­போது 14 உறுப்­பி­னர்­க­ளும் தம்மிடையே பங்­கி­ட­வேண்­டும்.
என்­னைப் பொறுத்­த­வ­ரை­யில் முக்­கி­ய­ மான விட­யங்­க­ளில் பேசு­வ­தற்கு விரும்பி நேரம் கேட்பது வழக்­கம். அப்­போது சம்­பந்­தன் அண்­ணை­யும், சேனாதி அண்ணை போன்­ற­வர்­க­ளும் அதில் பேசு­கின்­ற­போது அவர்­கள் மேல­தி­க­மான நேரங்­களை எடுத்­து­வி­டு­வார்­கள். எங்களுடைய நேரங்­கள் வெட்­டப்­ப­டும். அப்­ப­டி­யான நேரங்­க­ளில் பேசு­வ­தற்­குச் சந்­தர்ப்­பம் இல்­லா­மல் போயுள்­ளது.
ஒரே ஒரு தடவை பேசி­யது என்ற விட­யம் 2019ஆம் ஆண்­டில் மாத்­தி­ரம் சொல்­லப்­ப­டு­கின்­றது. அந்த ஆண்டு நாடா­ளு­மன்­றத்­தில் மிகக் குழப்­பம் நிறைந்த ஆண்­டா­க­வும், இரண்டு அல்­லது மூன்று தட­வை­கள் நாடா­ளு­மன்­றம் ஒத்­தி­வைக்­கப்­பட்ட ஆண்­டா­க­வும் அமை­கின்­றது.
நாடா­ளு­மன்­றத்­தில் 1994ஆம் ஆண்­டி­லி­ருந்து நான் பேசிய விட­யங்­கள், எத்­தனை தடவை பேசி­யி­ருக்­கின்­றேன் என்­பவற்றை எடுத்­துப் பார்த்­தால் நாடா­ளு­மன்­றத்­தில் எனது பங்­க­ளிப்­பின் முக்­கி­யத்­து­வம் தெரி­யும். வச­தி­யாக இருந்­தால், நான் அவற்றை எடுத்து விரை­வில் வெளியிடுவேன்.

புலி­கள் தடுத்­தார்­களா?

கே -: தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆரம்­பிக்­கப்­பட்டு 10 ஆண்­டு­க­ளின் பின்­னர், தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளு­ட­னான ஆயு­தப் போர் முடி­வுக்கு வந்த பின்­னரே கூட்­ட­மைப்­பில் புளொட்  இணைந்து கொண்­டது. கூட்­ட­மைப்­பில் நீங்­கள் இணை­வதை தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் தடுத்­தி­ருந்­தார்­களா?

ப  – :நிச்­ச­ய­மாக இல்லை. 2004ஆம் ஆண்டு தேர்­த­லில் கூட்­ட­மைப்பில் இணைந்து போட்டியிடு­மாறு தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்பு எங்­க­ளி­டம் கோரி­னர். தமி­ழீழ விடுதலைப் புலி­கள் அமைப்­பின் புல­னாய்வுத் து­றைப் பொறுப்­பா­ளர் பொட்­டம்­மா­னின் நேரடிப் பிர­தி­நிதி, எங்­கள் கட்­சி­யின் ஆர்.ஆர். (ராக­வன்) உடன் வவு­னி­யா­வில் சந்­தித்­துப் பேச்சு நடத்­தி­னார்.

‘‘ இப்­போதுள்ள  சமா­தான ஒப்­பந்­தம் விரை­வில்  உடை­ந்து பெரும் அழிவு ஏற்­ப­டும். அந்த அழி­வில் நாங்­கள் பங்­கேற்­கத் தயா­ரில்லை. ஆனால் உங்­கள் போராட்­டத்­துக்கு நாங்­கள் பங்­கம் ஏற்­ப­டுத்த மாட்­டோம்’’ என்று  தெரிவித்திருந்தோம்.
இதே­வேளை அந்­தக் காலத்­தில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­லி­ருந்த சிலர் நாங்­கள் கூட்டமைப்­பில் இணைந்து போட்­டி­யி­டு­வதை கடு­மை­யாக எதிர்த்­தி­ருந்­தார்­கள். விடுதலைப் புலி­கள் ஒரு தடவை பேசி­விட்டு பின்­னர் பேசா­மல் இருந்­த­துக்கு அது­வும் ஒரு கார­ண­மாக இருக்­க­லாம்.

கே: – யார் எதிர்த்­தி­ருந்­தார்­கள்?

ப – :அவர்­க­ளின் பெய­ரைக் கூற விரும்­ப­வில்லை. அத­னைக் கூறி குழப்­பத்தை உரு­வாக்க விரும்­ப­வில்லை. நாங்­கள் கூட்­ட­மைப்­பில் போட்­டி­யிட்­டால் தங்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­ப­டும் என்று கரு­திய சிலரே அவ்­வாறு செயற்­பட்­டார்­கள்.

கே: – அப்­ப­டி­யா­னால் 2011ஆம் ஆண்டு கூட்­ட­மைப்­பில் இணைந்­த­ போது அதனை எவரும் எதிர்க்கவில்லையா? உங்­களை இணைப்­ப­தில் எதிர்ப்­பு  இருக்­க­வில்­லையா?

ப: – 2011ஆம் ஆண்டுச் சூழ­லைப் பார்க்­க­வேண்­டும். நாங்­கள் வெளியே நிற்­ப­தால் ஒற்றுமையைக் குழப்­பிக் கொண்­டி­ருப்­ப­தாக இருக்­கக் கூடாது. விடு­த­லைப் புலி­க­ளின் அழிவுக்குப் பின்­னர் தமிழ் மக்­கள் மிகப் பல­வீ­ன­மான நிலைக்­குத் தள்­ளப்­பட்­ட­போது நாங்­கள் இணை­வது நல்­லது என்று பல­ரும் கூறி­னார்­கள். கூட்­ட­மைப்­பி­லி­ருந்த பங்­கா­ளிக் கட்­சித் தலைவர்­கள் உள்­ளிட்ட பலர் நேர­டி­யாக என்­னு­டன் பேச்சு நடத்­தி­னார்­கள். அவர்­க­ளும் நிபந்தனை­களை விதிக்­க­வில்லை. நாங்­க­ளும் நிபந்­த­னைகளை விதிக்­க­வில்லை. இணைந்து கொண்­டோம்.

அழிவு பற்­றிய ஆரூ­டம்

கே: – சமா­தான உடன்­ப­டிக்கை முறி­வ­டைந்து பெரும் அழிவு நிக­ழும். அதில் நாங்­கள் பங்கேற்க விரும்­ப­வில்லை என்று எந்த அடிப்­ப­டை­யில், புலி­க­ளின் பிர­தி­நி­தி­க­ளுக்கு கூறியிருந்தீர்­கள் ?

ப: – பங்­கேற்­க­வில்லை என்­ப­தன் அர்த்­தம் பொறுப்­பேற்க விரும்­ப­வில்லை. இன்­றைய இந்த அழி­வில் எல்­லோ­ருக்­கும் பொறுப்பு இருக்­கின்­றது. மறை­மு­க­மாக நாங்­க­ளும் பொறுப்­புத்­தான். அதை மறுக்­க­மாட்­டேன். ஆயுத இயக்­கங்­க­ளாக இயங்­கி­ய­வர்­கள், சாத்­வீக வழி­யில் இயங்கியவர்­கள் அனை­வ­ரும் பொறுப்பு. தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளுக்கு மாத்­தி­ரம்­தான் பொறுப்பு என்று சொல்லிவிட்டு எவ­ரும் செல்ல முடி­யாது.

சமா­தான உடன்­ப­டிக்கைக் காலத்­தில் இரண்டு தரப்­புக்களும் தங்­க­ளைப் பலப்­ப­டுத்­து­வதை நாங்­கள் பார்த்­துக் கொண்­டி­ருந்­தோம். இது மக்­க­ளுக்கு ஆபத்தான நிலையை உரு­வாக்­கும் என்பதை புலி­க­ளின் பிர­தி­நி­தி­க­ளுக்கு விளங்­கப்­ப ­டுத்­திக் கூறி­னோம்.

அரச தரப்­பின் ஆயத்­தங்­களை எங்­க­ளால் ஊகிக்­கக் கூடி­ய­தாக, அறி­யக் கூடி­ய­தாக இருந்­தது. அதே நேரத்­தில் சர்­வ­தேச ரீதி­யில் புலி­க­ளுக்கு எதி­ரான முனைப்பு இருந்­தது. போரில் விடுதலைப் புலி­க­ளுக்கு எதி­ராக இந்­தியா, அமெ­ரிக்கா, பிரிட்­டன் என்று சகல நாடு­க­ளும் இலங்கை அரசுக்கு ஆயு­தங்­க­ளைக் கொடுத்து  உத­வி­யி­ருக்­கின்­றார்­கள். புல­னாய்­வுத் தக­வல்­க­ளைப் பரி­மா­றி­யி­ருக்­கின்­றார்­கள்.

அந்­தக் காலத்­தில் தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் 11 ஆயு­தக்  கப்­பல்­கள் அழிக்­கப்­பட்­டன. அந்தக் கப்­பல்­களை அழிப்­ப­தற்­கான உள­வுத் தக­வல்­க­ளைக் கொடுத்­தது மாத்­தி­ர­மல்ல, அவற்றை அழிப்­ப­தற்கு வெளி­நா­டு­கள் உத­வி­ய­தாக நாங்­கள் இப்­போது அறி­கின்­றோம். இப்படி­யான ஆபத்­துக்­கள் இருக்­கின்­றன என்­பதை முன்­கூட்­டியே கூறி­யி­ருந்­தோம்.

நாங்­கள் கூறி­யதை புலி­கள்  அலட்­சி­ய­மாக  எடுத்­துக் கொண்­டார்­கள். காற்­றுப் புக முடி­யாத இடத்­தி­லும் நாங்­கள் புகு­வோம் என்று பொட்­ட­மா­னின் பிர­தி ­நிதி எங்­க­ளுக்­குச் சொல்லி விட்டுச் சென்­றார். புலி­கள் மாத்­தி­ர­மல்ல, தமிழ் மக்­க­ளு­டைய சாபக்­கேடே, எங்­களை நாங்களே மிகைப்­ப­டுத்­திக் கொள்வதுதான்.

கோத்­தா­ப­ய­வைப் பற்றி
புலி­க­ளுக்கு எச்­ச­ரித்­தோம்

கே: – சமா­தான ஒப்­பந்த காலத்­தில் அரசு தன்­னைப் போருக்­குத் தயார்­ப­டுத்­திக் கொண்­டி­ருந்­தது என்று கூறி­யி­ருந்­தீர்­கள். அரச தரப்பு சமா­தான ஒப்­பந்­தத்­தில் இத­ய­சுத்­தி­யு­டன் செயற்படவில்லையா?

ப: – அரச தரப்பு இத­ய ­சுத்­தி­யு­டன் செயற்­ப­ட­வில்லை. பேச்சுக்களில் ஒரு முன்­னெ­டுப்புக் கிடை­யாது. இழுத்­த­டித்­துச் சென்­றார்­கள். விடு­த­லைப் புலி­க­ளின் முக்­கி­ய­மான பின்னடைவுக்குக் கார­ணம் 2005ஆம் ஆண்டின் ஜனா­தி­ப­தித் தேர்­தல்.

2005ஆம் ஆண்­டுக்கு முன்­னர் நடை­பெற்ற போர்க­ளின்போது இரா­ணு­வம், விமா­னப் படை, கடற்­படை ஆகி­ய­வற்­றுக்கு இடை­யில் ஒருங்­கி­ணைவு, தக­வல் பரி­மாற்­றம் என்­பவை இருக்கவில்லை. 2005ஆம் ஆண்டு ஜனா­தி­ப­தி­யாக மஹிந்த ராஜ­பக்ஷ தெரிவு செய்­யப்­பட்ட பின்­னர், பாது­காப்பு அமைச்­சின் செய­ல­ராக கோத்­தா­பய பொறுப்­பேற்­றுக் கொண்­டார். அவர் முப்­ப­டை­க­ளை­யும் ஒருங்­கி­ணைத்­தார். அவ­ருக்கு அதற்கான முழு அதி­கா­ர­மும் இருந்­த­மை­யால், அத­னைச் செய்ய முடிந்­தது. செய்­து­விட்­டுச் சொல்­ல­லாம், சொல்­லி­விட்­டும் செய்­ய­லாம் என்ற நிலைமை அவ­ருக்கு இருந்­த­தால், இவற்றைத் தடை­யின்­றிச் செய்­தார். அப்­போ­தும்கூட புலி­க­ளுக்­குச் சொன்­னோம்.  “மிக  அலட்­சி­ய­மாக எடுக்­கா­தீர்­கள். கோத்­தா­பய வந்­தி­ருக்­கின்­றார். அவ­ரும் உங்­க­ளைப் போன்ற (புலி­கள்) சிந்­த­னை ­யில் இருக்­கின்­றார். போர்தான் என்ற ஒற்­றைச் சிந்­த­னை­யில் –  மாத்­தி­ரமே – இருக்­கின்­றார்” என்று சொன்­னோம்.

கே: – அப்­ப­டிப்­பட்ட ஒரு­வர் இப்­போது ஜனா­தி­ப­தி­யா­கி­யி­ருக்­கின்­றார். இனி என்ன நடக்­கப் போகின்­றது?

ப: – அவர் ஒரு விட­யத்­தில் மிகத் தெளி­வாக இருக்­கின்­றார். அதி­கா­ரப் பர­வ­லாக்­கம் தேவையில்­லாத விட­யம். அவ­ரு­டன் நான் அன்று தொடக்­கம் கதைத்து வந்­த­தி­லி­ருந்து தெரிந்த விட­யம். மற்­றை­யது சிறிய நாட்­டுக்­குள் இவ்­வ­ளவு அர­சி­யல் கட்­சி­கள் தேவை­யில்லை. இரண்டு மூன்று கட்­சி­கள் மாத்­தி­ரம் இருந்­தால் போதும் என்ற நிலைப்­பா­டும் அவ­ருக்கு இருக்கின்­றது.

அவர் சிறந்த சிங்­க­ளத் தேசி­ய­வாதி. சிறு­பான்­மை­யி­னர் இந்த நாட்­டில் வாழட்­டும். அவர்களுக்குத் தேவை­யான அபி­வி­ருத்­தி­க­ளைச் செய்­தால் சரி. இந்­தச் சிந்­தனை கோத்தாபயவுக்கு மாத்­தி­ர­மல்ல, பல சிங்­க­ளத் தலை­வர்­க­ளுக்கு இருக்­கின்­றது. சிங்­க­ளத் தேசியவா­தம் இருப்­ப­தில் பிழை­யில்லை. எப்­படி எங்­க­ளுக்கு தமிழ்த் தேசியவாதம் இருக்கின்றதோ, அதே­போன்று அவர்­க­ளுக்கு சிங்களத் தேசியவாதம் இருக்­கின்­றது. ஆனால், எங்­களை ஆக்­கி­ர­மிக்­கின்ற தேசிய வாத­மாக அது இருக்­கக் கூடாது. எங்­க­ளைத் தாக்­கு­கின்ற நிலை­மைக்கு வரக்­கூ­டாது. அவர்­கள் எங்­க­ளின் சுதந்­தி­ரத்­தைப் பறிக்­கின்ற நிலைப்­பா­டு­க­ளைத்­தானே எடுக்­கின்­றார்­கள்.

சிறு­பான்­மை­யி­ன­ருக்­குச் சாத­க­மா­க
கோத்­தா­பய செயற்­ப­டார்

கே: – ஜனா­தி­ப­தித் தேர்­தல் காலத்­தில் கோத்­தா­பய மீது தமிழ் மக்­க­ளுக்கு இருந்த பயம் குறை­வ­டைந்து செல்­கின்­றதா? கோத்­தா­ப­ய­வின் நிர்­வா­கம் சார் அதி­ரடி நட­வ­டிக்­கை­க­ளால் அவரை ஏற்­றுக் கொள்­ளும் போக்கு ஏற்­ப­டு­கின்­றதா?

ப:நிர்­வாக ரீதி­யா­க­வும், பாது­காப்பு ரீதி­யா­க­வும் அவர் திற­மா­கச் செயற்­ப­டு­வார் என்று நான் முன்­னரே எதிர்­பார்த்­தேன். சிறு­பான்­மை­யி­ன­ருக்­குச் சாத­க­மான அர­சி­யல் நட­வ­டிக்கையை அவர் எடுக்க மாட்­டார். 70ஆண்­டு­க­ளாக தமிழ் மக்­கள் சமஷ்­டிக்­கும் அல்­லது தனி­நாட்­டுக்­கும் ஆத­ரவு கொடுத்­துள்­ளார்­கள். தமி­ழர்­க­ளுக்கு நிர்­வா­கம் வேண்­டும், பாது­காப்பு வேண்­டும் எல்­லாம் வேண்­டும். அதற்கு முதன்மை கொடுக்­க­மாட்­டார்­கள். அர­சி­யல் தீர்­வுக்­குத்­தான் முதன்மை கொடுத்­தி­ருந்­தார்­கள், கொடுக்­கின்­றார்­கள்.
வடக்கு கிழக்­கைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தும் சகல கட்சிகளும் அதி­கா­ரப் பகிர்­வைப் பற்­றிக் கதைத்­தி­ருக்­கின்­றன. மக்­கள் நூறுவீதம் அதி­கா­ரப் பகிர்­வுக்­கா­கத்­தான் வாக்­க­ளிக்­கின்­றார்­கள்.

கே: – இந்­தப் போக்­கில் கோத்­தா­பய சென்று கொண்­டி­ருந்­தால், எதிர்­கா­லத்­தில் அவர் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யைப் பெற்­றால், அவரை எப்­ப­டிக் கையா­ளப் போகின்­றீர்­கள் ?

ப: – நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை அவர்­க­ளுக்கு கிடைக்­கும் என்று நான் நம்­ப­வில்லை.
அவர் தப்­பித்­த­வறி அவ்­வாறு பெற்­றால், மிகப் பெரிய ஆபத்து இருக்­கின்­றது. தமி­ழர்­க­ளுக்கு மாத்­தி­ர­மல்ல, சிங்­கள புத்­தி­ஜீ­வி­கள், சிவில் சமூ­கத்­த­வர்­க­ளுக்­கும் ஆபத்து இருக்­கின்­றது.
தமி­ழர்­க­ளுக்­கான தீர்­வில் அக்­கறை கொண்ட சிங்­கள சிவில் சமூ­கத்­தி­னர் என்­னி­டம் பேசும்­போது, தீர்­வைப் பற்றி கோத்தா தரப்பு அக்­க­றை­யில்­லா­மல் இருக்­கின்­றது. அவர்­கள் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யைப் பெற்­றால், 13ஆவது திருத்­தச் சட்­டத்­தையே, மாகா­ண­சபை முறை­மை­யையே இல்­லா­ம­லாக்கும் நிலைப் பாட்டை எடுக்­க­லாம்.
கோத்தா என்ன நினைக்­கின்­றாரோ தெரி­ய­வில்லை. ஆனால் அவ­ரைச் சுற்றி உதய கம்­பன்­பில, விமல் வீர­வன்ச போன்­ற­வர்­கள் இருக்­கின்­றார்­கள். இரா­ணு­வத் தள­ப­தி­கள் இருக்­கின்­றார்­கள். அவர்­கள் கோத்­தா­பய 13ஆவது திருத்­தத்தை ஒழிக்­கும் விட­யத்தை முன்­னெ­டுக்க ஊக்­கு­விக்­க­லாம். இந்த ஆபத்தை எனக்கு முதன் முத­லில் சொன்­னதே சிங்­க­ளப் புத்­தி­ஜீ­வி­கள்­தான்.
ஆனால், மஹிந்த அர­சி­யல்­வாதி. அவ­ருக்கு சர்­வ­தேச அழுத்­தங்­ளைப் பற்றி நன்­றா­கத் தெரி­யும். முக்­கி­ய­மாக 13ஆவது திருத்­தத்தை இல்­லா­மல் செய்­வது இந்­தி­யா­வு­டன் எவ்­வ­ளவு பெரிய பிரச்­சி­னையை உரு­வாக்­கும் என்­ப­தும் அவ­ருக்­குத் தெரி­யும்.

கூட்­ட­மைப்பு தனியே
தேர்­த­லுக்­கான கூட்டா?

கே: – கூட்­ட­மைப்­புக்­குள் தேர்­தல் காலங்­க­ளில் பூதா­க­ார­மாக பிரச்­சி­னை­கள் வெடிக்­கின்­றன. தேர்­தல் காலங்­க­ளில் சில அர­சி­யல் கட்­சி­கள் கூட கூட்­ட­மைப்­பி­லி­ ருந்து வெளி­யே­றி­யி­ருக்­கின்­றன. அப்­ப­டி­யா­னால் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு வெறும்  தேர்­த­லுக்­கான அர­சி­யல் கூட்டா?

ப: – தேர்­தல் காலங்­க­ளில் பிரச்­சி­னை­கள் எழு­வ­தற்­குக் கார­ணம் உண்டு. கூட்­ட­மைப்பு கட்­சி­யா­கப் பதிவு செய்­யப்­பட்­டி­ருந்­தால், இப்­ப­டி­யான பிரச்­சி ­னை­கள் எழாது. தனித்தனி­யாக கட்­சி­யாக இருக்­கின்­றோம். தனித் தனிக் கட்­சி­களாக இருக்­கின்­ற­போது, நாங்­கள் ஒவ்­வொரு கட்­சி­யும், எங்­க­ளது கட்­சி­க­ளைப் பலப்­ப­டுத்­தவே பார்ப்­போம். பலப்­ப­டுத்­த­வேண்­டும் என்ற சிந்­த­னை­யில் கட்சிகள் கூடு­த­லான ஆச­னங்­க­ளைக் கேட்­பது வழமை. நாங்­கள் எங்கே எங்­க­ளால் வெல்ல முடி­யும் என்­ப­தைக் கவ­னத்­தில் எடுத்தே, ஆச­னங்­க­ளைக் கேட்­போம்.
எங்­கள் கூட்­டுக்­குள் கட்­சி­க­ளுக்கு இடையே கருத்து வேறு­பாடு இல்­லா­விட்­டால், அந்­தக் கூட்டு வள­ரக் கூடிய கூட்டு அல்ல. கருத்து வேறு­பா­டு­கள் இருக்க வேண்­டும், அது பற்­றிக் கதைக்­கப்­பட வேண்­டும், பின்பு தீர்க்­கப்­பட வேண்­டும். அந்­தக் கட்­சி­தான் சரி­யான வளர்ச்­சி­யைக் காணும். சம்­பந்­தன் அண்­ணை­யின் கருத்­துக்கு நாங்­கள், மற்­றைய கட்­சி­கள் கடும் எதி­ராக இருந்­தா­லும், அவர் உட­ன­டி­யாக குழம்­பிப் போய்­விட்­டது என்று நிற்­க­மாட்­டார். ஒரு கூட்­டம், இரண்டு கூட்­டம், ஐந்து கூட்­டம் என்று பல கூட்­டங்­கள் வைத்து, தனது கருத்தை ஒரு­வாறு எங்­கள் மீது திணிப்­பார் அல்­லது ஏற்க வைப்­பார்.

கே: – எதிர்­வ­ரும் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பின்­ன­டை­வைச் சந்­திக்­கும் என்று ஆரூ­டம் கூறி­யி­ருந்­தீர்­கள். அதற்­கான கார­ணம் என்ன?

ப: – மக்­கள் மத்­தி­யில் அதி­ருப்­தி­யான நிலைப்­பாடு. முக்­கி­ய­மாக தீர்வு விட­யத்­தில் சரி­யான நிலைமை இய­ல­வில்லை.நாங்­கள் கண்ணை மூடிக் கொண்டு ஐக்­கிய தேசி­யக் கட்­சியை ஆத­ரிப்­ப­தாக மக்­கள் பலர் நினைக்­கின்­றார்­கள். இவை­கள் ஒரு கார­ணம்.ஆனால் இது மக்­கள் மத்­தி­யில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட தவ­றான அபிப்­பி­ரா­யம்.

கே: – மக்­கள் மத்­தி­யில் தவ­றான அபிப்­பி­ரா­யம் உரு­வாக்­கப்­பட்­ட­தா­கக் கூறு­கின்­றீர்­கள். ஏன் சரி­யா­னதை மக்­க­ளி­டம் சொல்­ல­வில்லை?

ப: – அர­சு­டன் ஒரு விட­யத்தை நாங்­கள் செய்­யும் போது மக்­கள் அப்­ப­டிக் கரு­து­வ­தற்கு வாய்ப்­புக்­கள் இருக்­கின்­றன. அதைச் சரி செய்­வ­தற்கு நாங்­கள் சில விட­யத்தை மக்­க­ளுக்­குச் சொல்­லப் போகின்­ற­போது, தெற்­கில் அது பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்தி விடும்.
உதா­ர­ணத்­துக்கு ஒரு விட­யத்­தைச் சொல்­கின்­றேன். பண்டா, செல்வா ஒப்­பந்­தம் மூலம் தமி­ழர்­களை பண்­டா­ர­நா­யக்­க­வுக்கு விற்று விட்­டார்­கள் என்று அப்­போது தமிழ்க் காங்­கி­ர­ஸின் ஜி.ஜி.பொன்­னம்­ப­லம் சொல்­லித் திரிந்­தார். இதற்­காக தமிழ் அர­சுக் கட்­சி­யி­னர், ஒப்­பந்­தத்­தில் உள்ள விட­யங்­க­ளைக் கூறி மக்­க­ளைத் தெளி­வ­டை­யச் செய்­தார்­கள். தமிழ் அர­சுக் கட்­சி­யி­னர் தமிழ் மக்­க­ளுக்­குச் சொன்­னதை வைத்து தெற்­கில் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் ஜே.ஆர்.ஜெய­வர்­தன கண்டி யாத்­திரை போனார். குழப்­பங்­களை ஏற்­ப­டுத்தி அந்த ஒப்­பந்­தத்தை கிழித்­துப் போடச் செய்­தார்.
சில விட­யங்­க­ளில் நாங்­கள் பக்­கு­வ­மாக நடக்க வேண்­டும். மக்­க­ளுக்கு இந்த விட­யங்­கள் தெரிய­வ­ரு­கின்­ற­போது தெரிந்து கொள்­ளட்­டும். அதற்கு முன்­னர் அந்த விட­யங்­களை குழப்பி விடக் கூடாது என்­ப­தில் தெளி­வாக இருந்­தோம், இருக்கிறோம்.

மஹிந்­த­வு­டன் பேச­லாம்

கே: – நாடாளுமன்றத் தேர்­த­லின் பின்­னர் புதிய அர­ச­மைப்பு முயற்சி தொட­ருமா?
ப: – தேர்­த­லின் பின்­னர் மஹிந்­தவே பெரும் பா­லும் பிர­த­ம­ராக வரு­வார். அவர் அர­சி­யல்­
வாதி. கோத்­தா­பய போன்­றில்லை. அவ­ரு­டன் நாம் பேசக் கூடிய வாய்ப்பு வரும்.

ஆனால் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் வடக்கு,கிழக்­கில் நாம் சித­றிப் போனால் அது அரச தரப்­புக்­குத்­தான் வாய்ப்­பா­கி­வி­டும். வட­க்கு – கி­ழக்­கி­லி­ருந்து நான்கு அல்­லது ஐந்து கட்­சி­க­ளைப் பிர­தி­நி­தித்­து­ வப்­ப­டுத்தி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் வந்­தால், அரச தரப்பு அதையே சாட்­டாக வைத்து விட­யத்தை இழுத்­த­டித்து விடும்.
வடக்கு கிழக்­கி­லி­ருந்து வந்த கூட்­ட­மைப்­பு­டன் மாத்­தி­ரம் பேசத் தேவை­யில்லை. அந்த மக்­க­ளைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தும் அனைத்து அர­சி­யல் கட்­சி­க­ளு­ட­னும் பேச வேண்­டும் என்று இப்­போதே அரச தரப்­பி­னர் சொல்­கின்­றார்­கள். தேர்­த­லில் நாங்­கள் சித­றிப் போனால் அர­சுக்கு அது இன்­ன­மும் இல­கு­வா­கி­வி­டும். அத­னால்­தான் கூட்­ட­மைப்பை உடைக்­கக் கூடாது என்­ப­தில் நாங்­கள் மிகக் கவ­ன­மாக இருக்­கின்­றோம்.

அதி­கா­ரப்­போட்­டியே கார­ணம்

கே: – கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான மாற்று அணி கூட மாற்று அணி­யாக, ஓர­ணி­யாக இல்­லையே?

ப: அவர்­க­ளும் கொள்கை ரீதி­யைக் காட்­டி­லும், ஆசன ரீதி­யாகவே சிந்­திக்­கின்­றார்­கள். விக்­னேஸ்­வ ­ரன் ஐயா­வைக் காண்­பித்து தாங்­கள் படி­யில் ஏறி­வி­ட­லாம் என்­றும், சிலர் சிந்­திக்­கின்றார்­கள். இப்­ப­டி­யான மனப்­பாங்­கு­க­ளு­டன் இருப்­ப­தால்­தான் அவர்­க­ளால் சரி­யாக இயங்க முடி­யா­மல் இருக்­கின்­றது.
புலி­கள் இருந்த காலத்­தில் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லத்­துக்கு, ஈ.பி.ஆர்.எல்.எவ்., ரெலோ­வு­ட­னும் வேலை செய்ய முடி­யும். இப்­போ­து­தான் அவ­ருக்கு ஈ.பி.ஆர்.எல்.எவ். பெரிய பிரச்­சி­னை­யா­கத் தெரி­கின்­றது. தமிழ் மக்­கள் பேர­வை­யில், எழுக தமி­ழில் நான், கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம், சுரேஷ் ஆகியோர் கடை­க­டை­யா­கச் சென்று ஆத­ர­வைத் திரட்­டி­னோம்.
அந்தத் தருணத்தில் சேர்ந்து வேலை செய்ய முடி­யும். இப்­போ­து­தான் சுரே­ஷு­டன் சேர்ந்து வேலை செய்ய முடி­யாது என்­கி­றார்­கள் . ஏனென்­றால், அவர் இயக்­கம் என்று சொல்­லு­கின்ற நிலைமை.அதி­கா­ரப் போட்­டி­தான் இதற்­குக் கார­ணம்.

காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ருக்கு
புளொட்­டும் கார­ணமா?

கே: – காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் தொடர்­பில் நிய­மிக்­கப்­பட்ட பர­ண­கம ஆணைக்­கு­ழு­வின் முன்னிலை யில் சாட்சியமளித்தோர் பலர் புளொட் அமைப்­பால் தங்­கள் உற­வு­கள் கடத்­தப்­பட்­ட­தாக தெரிவித்தனர். அர­சி­டம் பொறுப்­புக் கூறலை வலி­யு­றுத்­தும் நீங்­கள் இந்த விட­யத்­தில் எப்­ப­டிப் பொறுப்­புக் கூறப் போகின்­றீர்­கள் ?

ப: – அர­சி­ய­லுக்­காக குற்­றம் சுமத்­த­வேண்­டாம். ஆதா­ரங்­க­ளு­டன் கூறி­னால் அதற்கு நாம் ஒத்­து­ழைக்­கத் தயார். எங்­கள் இயக்க உறுப்­பி­னர்­கள் சில­ருக்கு எதி­ராக இவ்­வா­றான குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பில் நீதி­மன்­றங்­க­ளில் வழக்­கு­கள் தொடுக்­கப்­பட்­டன. ஆனால் அவை தள்­ளு­படி செய்­யப்­பட்டு விட்­டன. இப்­போ­தும் சொல்­கின்­றேன், எங்­கள் இயக்க உறுப்­பி­னர்­க­ளால் கடத்­தப்­பட்­ட­ார்கள் என்று நம்பினால், அதை உரிய ஆதா­ரங்­க­ளு­டன் கொண்டு வந்து நிரூ­பி­யுங்­கள். அவர்­க­ளுக்கு எதி­ராக சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு நாங்­கள் ஒத்­து­ழைப்­போம்.

கே: – நீங்­கள் ஆயுத அமைப்­பில் இருந்­த­வர். தமிழ் மக்­க­ளின் விடி­வுக்­காக ஆயு­தம் ஏந்­தி­ய­வர். இப்­போதைய அரசியல் சூழல், கோத்­தா­ப­ய­வின் நட­வ­டிக்கைகள் மீண்­டும் தமி­ழர்­களை ஆயு­தம் தூக்­கு­வ­தற்கு தள்ளக்கூடுமா?

ப: கோத்­தா­பய அர­சுக்கு எதி­ரான அதி­ருப்தி, உணர்­வு­கள் தமிழ் மக்­கள் மத்­தி­யில் உரு­வா­கிக் கொண்­டி­ருக்­கின்­றன. ஆனால் ஆயு­தப் போராட்­டத்­துக்­கான ஆரம்­ப­மாக இது இருக்­கும் என்று இது­வ­ரை­யில் நான் நம்­ப­வில்லை.

நன்றி : திலீப் (உதயன் பத்திரிகையின் சஞ்சீவி)