வவுனியாவில் இரு இடங்களில் இராணும் மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் இருந்து தென் பகுதிக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக தெரிவிக்கப்படும் நிலையிலேயே அண்மைய நாட்களில் இச்சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. புதூர் மற்றும் ஓமந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சோதனையின்போது பேருந்துகளில் இருந்து வரும் பயணிகள் பகல், இரவு நேரங்களிலும் கீழே இறக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

அதன் பின்னர் புதூர் பிரதேசத்தில் சில மீற்றர் தூரம் நடந்து சென்றே மீண்டும் பேருந்தில் ஏறிச்செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இச் சோதனைகளின்போது பெருந்தொகையான போதைப்பொருள் மீட்கப்படுவதாக கூறப்படுகின்றது.

எனினும் இரவு நேரங்களில் தூர இடங்களுக்கு செல்பவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.