எதிர்வரும் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கும் சந்தர்ப்பத்தினை தனியார் துறையினருக்கும் பெற்றுக் கொடுக்குமாறு கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கெஃபே அமைப்பு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் பொதுத் தேர்தல், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி தேர்தல்களில் வாக்களிப்பதற்கு பொதுமக்களிடம் குறைந்தளவிலான ஆர்வமே காணப்படுவதாகவும், தலை நகர் போன்று ஏனைய பிரதான நகரங்களில் தனியார் நிறுவனங்களில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் நபர்கள் வாக்களிப்பதற்காக தமது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு தயக்கம் காட்டுவதாகவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தலில் வாக்களிப்பதற்காக தனியார் பிரிவுகளின் ஊழியர்களுக்கு அவர்களின் வாக்களிப்பு நிலையங்கள் காணப்படும் தூரத்தை கருத்திற் கொண்டு விடுமுறை வழங்கும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது.

எனினும், தூர பிரதேசங்களில் வசிக்கும் சிலர் வாக்களிப்பதற்கு மாத்திரம் பணத்தை செலவிட்டு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்புவது பிரச்சினைக்குரிய விடயமாகும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது