முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மருத்துவ புனர்வாழ்வு வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கபட்ட நிலையில் நீதிமன்றின் உத்தரவுக்கமைய நேற்று (13) மேலதிக அகழ்வு பணிகள் முன்னெடுக்கபட்டது.
குறித்த வைத்தியசாலை அமைக்கப்பட்டுவரும் பகுதியில் அபாயகரமான வெடிபொருட்கள் இருக்கும் நிலையில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் ஒன்றினால் கண்ணிவெடி அகற்றும் பணி முன்னெடுக்க பட்டு வந்தநிலையில் சிதைவடைந்த மனித எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கபட்டு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் முல்லைத்தீவு நீதிமன்றின் கவனத்துக்கு குறித்த விடயத்தை பொலிஸார் கொண்டு சென்ற நிலையில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின்குமார் குறித்த இடத்தை பார்வையிட்டு அந்த பிரதேசத்தை சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் அகழ்வு செய்யுமாறு உத்தரவிட்டதுக்கு அமைய மேலதிக அகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி தனுசன் தலைமையில் பொலிஸார், தடயவியல் பொலிஸார் மற்றும் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினரின் பங்கு பற்றுதலுடன் அகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இந்த அகழ்வின் போது சிதைவடைந்த மனித எச்சங்கள், துப்பாக்கி ரவைகள் சில, இரண்டு பேருடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கபடும் ஆடைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. மீட்கபட்ட தடய பொருட்கள் சட்ட வைத்திய பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது.