கொவிட் – 19 வைரஸ் தொற்று காரணமாக ஆசியாவிற்கு வௌியில் முதலாவது மரணம் பதிவாகியுள்ளது.அதன்படி, சீனாவில் இருந்து பிரான்ஸ் நோக்கி சுற்றுலா பயணம் சென்றிருந்த நபரொருவர் கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் சீனாவிற்கு வௌியே இதுவரை மூன்று பேர் கொவிட் -19 வைரஸ் தொற்றில் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹூபே மாகாண தலைநகர் வுஹானில் கொவிட்-19 வைரஸ் கண்டறியப்பட்டது.

இதன்பின்னர் பீஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் பரவியது. எனினும், வுஹானில் இந்த வைரஸ் அதிக பாதிப்பு ஏற்படுத்தியது. இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

சீனாவில் கொவிட்-19 வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி நேற்று மேலும் 143 நபர்கள் பலியாகியுள்ளனர். ஹூபே மாகாணத்தில் மட்டும் 139 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் சீனாவில், கொவிட்-19 வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 1631 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மேலும் 2641 பேருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீனா முழுவதும் மொத்தம் 67,535 பேர் கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.