அரச நிறுவனங்களில் தற்காலிக, சாதாரண, மாற்று, ஒப்பந்தம் அல்லது நிவாரண அடிப்படையில் இணைத்துக் கொண்டு, 180 நாட்களுக்கு அதிகமான சேவைக் காலத்தினை பூர்த்தி செய்துள்ள பணியாளர்களுக்கு நிரந்தர நியமனத்தினை பெற்றுக் கொடுப்பதற்கு பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.

குறித்த பணியாளர்களுக்கு அலுவலக ஊழியர் மற்றும் ஒன்றிணைந்த சாரதி சேவையில் நிரந்தர நியமனத்தை பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சின் ஒன்றிணைந்த சேவை பணிப்பாளர் நாயகம் எஸ்.ஆலோக பண்டாரவினால் அனைத்து அமைச்சின் செயலாளர்கள், திணைக்களங்களின் பிரதானிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்பிட்டுள்ளது.

அதன்படி, குறித்த தரப்பினர் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் முதலாம் திகதியன்று 180 நாட்கள் பூரண சேவை காலத்தினை பூர்த்தி செய்திருக்க வேண்டும் எனவும் அதற்கான உரிய கல்வித் தகுதியும் பெற்றிருக்க வேண்டும்.

அவ்வாறான நபர்களுக்கு நிரந்தர நியமங்களை வழங்குவதற்காக தகவல்களை பெற்றுத்தருமாறு ஒன்றிணைந்த சேவை பணிப்பாளர் நாயகம் அனைத்து அமைச்சின் செயலாளர்கள், திணைக்கள பிரதானிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு குறித்த சுற்றறிக்கையின் முலம் தெரியப்படுத்தியுள்ளார்.

தகுதிவாய்ந்த பணியாளர்களுக்கு நிறுவனத்தின் பிரதானியால் தற்காலிக நியமன கடிதம் கையளிக்கப்படவுள்ள நிலையில், குறித்த கடிதம் கையளிக்கப்பட்டு மூன்று மாதக்காலப்பகுதியில் முறையான நியமனக் கடிதத்தை வௌியிட குறித்த ஆவணங்களை ஒன்றிணைந்த சேவை பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என குறித்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.