ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரினால் இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள்ஒன்பது பேருக்கு எதிரான தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணைகளை எதிர்வரும் மார்ச் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்க கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழங்கு இன்று (20) சம்பத் அபயகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இதன்போது, குறித்த வழக்கின் சாட்சி விசாரணைகளை மார்ச் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானித்த நீதிபதிகள் குழாம் சாட்சியாளர்களை அன்றைய தினம் நீதிமன்றின் ஆஜராகுமாறு அறிவுறுத்தினர்.

இந்த வழக்கின் பிரதிவாதிகளாக கிரிதலை இராணுவ முகாமின் கட்டளை அதிகாரி லுதினன் கர்ணல் ஷம்மி குமாரரத்ன, டபில்யூ.டீ.உபசேன (சுரேஷ்) ஆர்.எம்.பீ.கே.ராஜபக்ஷ (நாதன்) எஸ்.எம்.ரவிந்திர ரூபசிங்க (ரஞ்சி), சமிந்த குமார அபேரத்ன கனிஷ்க குணரத்ன, ஐய்யாசாமி பாலசுப்பரமணியம், தரங்க பிரசாத் கமகே மற்றும் டீ.ஈ.ஆர். பீரிஸ் ஆகிய இராணுவ புலனாய்வுப் பிரிவின் 9 உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

2010 ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த தினத்தில் கிரிதலை, ஹபரணை மற்றும் கொட்டாவை ஆகிய பிரதேசங்களில் பிரதிவாதிகள் மேலும் சில பெயர் தெரியாத நபர்களுடன் இணைந்து இரகசியமான முறையில் சிறைப்படுத்தும் நோக்கில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்தியமை மற்றும் கொலை செய்தமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் சட்டமா அதிபரினால் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.