யாழ். பிரதேச செயலகத்தில் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்ய முடியாது தடுமாறுபவர்களுக்கு உதவும் முகமாக, பட்டதாரி பயிலுனர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

யாழ். பிரதேச செயலகத்தில் பிறப்பத்தாட்சி பத்திரம் உள்ளிட்டவற்றை பெற வருவோர்கள் விண்ணப்பப்படிவங்களை நிரப்ப முடியாது தடுமாறுகின்ற வேளைகளில், அங்கு தரகர்கள் போன்று செயற்படும் சில நபர்கள், விண்ணப்ப படிவங்களை நிரப்பி கொடுப்பதற்கு, 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையில் அறவீடு செய்து வந்துள்ளார்கள்.

இதனை கண்டறிந்த பிரதேச செயலாளர் எஸ். சுதர்சன், தரகர்கள் போன்று செயற்பட்ட நபர்களை கடுமையாக எச்சரித்து, இனி பிரதேச செயலகத்துக்குள் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டால் பொலிஸாரிடம் கையளிக்கப்படுவீர்கள் என எச்சரித்து விடுவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முதல் பிரதேச செயலகத்திற்கு வரும் மக்கள் விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்ய முடியாது தடுமாறுபவர்களுக்கு உதவி செய்வதற்காக பட்டதாரி பயிலுனர்களை சேவையில் அமர்த்தியுள்ளார்.