தமிழ் தேசியக் கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மன்னாரை சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் காலை முதல் மன்னார் நகர சபை முன்னால் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.

மன்னாரைச் சேர்ந்த இரத்தினம் ஞானசேகரம் யூலியஸ் (வயது-39) என்பவரே குறித்த உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். உண்ணாவிரத போராட்டத்திற்கு முன்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர்,தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தனது அங்கத்துவ கட்சிகளுடன் இணைந்து கட்சியை பதிவு செய்வதாக கூடி முடிவை மேற்கொண்ட போதும் இதுவரை கட்சியை பதிவு செய்யவில்லை. எனவே தமிழர்களின் அடையாள கூட்டணியான தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டும்.

சுமார் 20 வருடங்களாக இக்கூட்டமைப்பில் இருந்து சாதிக்க முடியாமல்போன தலைவர்கள், இனியும் ஏதாவது சாதிப்பார்கள் என்பது சாத்தியமற்றது. எனவே காலம் தாழ்த்தாது உங்களின் பொறுப்புக்களில் இருந்து இராஜினாமா செய்து கட்சியின் ஆலோசகர்களாக விரும்பினால் தொடருங்கள்.

இளைஞர்களைக் கொண்டு கட்சியை பலப்படுத்தி தலைமைகளை செயற்திறன் மற்றும் துடிப்பு உள்ள அடுத்த தலைமுறையினரிடம் கைமாற்றுங்கள். உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை மக்கள் சார்பாக முன்வைக்கின்றேன்.

தமிழரசுக் கட்சி உட்பட தமிழ் தேசியக் கூட்டமையின் ஏனைய பங்காளிக் கட்சிகளுக்கு கூட்டமைப்பை கட்சியாக பதிவதில் எந்த ஆட்சேபனையும் இருக்காது என்பதனையும் ஒரு சிலரிடம் மட்டுமே ஆட்சேபனை உள்ளது என்பதுமே இதுவரை உள்ள பொதுவான கருத்து.

எனவே மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொள்ளப்படும் உண்ணாவிரத போராட்டத்திற்கு தாயகத்தை சேர்ந்த இளைஞர்கள், யுவதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், வர்த்தக சங்கங்கள், பொது அமைப்புக்கள், பொது மக்கள் அனைவரிடமும் ஆதரவை எதிர்பார்த்துள்ளேன். மேற்குறித்த கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளேன் என கூறியுள்ளார்.