கண்டியின் புறநகரில் தினமும் காணப்படும் கடும் வாகன நெரிசலை குறைத்துக் கொள்ளும் முகமாககண்டி புறநகர் ரயில் பாதை அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கட்டுமான பணிகளை விரைவு படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று (26) முற்பகல் போக்குவரத்து அமைச்சில் இந்த வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்ற நிலையில் கண்டி புறநகர் ரயில் பாதை அபிவிருத்திக் திட்டத்தை விரைவில் ஆரம்பிக்க இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் திலும் பதிரண, பாராளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம ஆகியவர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த திட்டத்திற்கு அமைய கண்டி புறநகர் ரயில் பாதை இலங்கையில் நிர்மாணிக்கப்படும் முதலாவது மின்சார ரயில் பாதையாகும்.

அதன்படி, இந்த ரயில் பாதையில் ரம்புக்கணையில் இருந்து கடுகன்னாவை வரையும், கடுகன்னாவையில் இருந்து கண்டி ஊடாக கட்டுகஸ்தொட வரையும் இருவழி பாதையின் ஊடாக ரயில்களை இயக்க வசதிகள் வழங்கப்படுகின்றன.

அதேபோல், கடுகன்னாவையில் இருந்து கம்பளை வரையான ரயில் பாதையை நாவலப்பிட்டி வரையில் நீடிக்குமாறும், அதனை குண்டசாலை பகுதியை உள்ளடக்கிய வகையில் நிர்மாணிக்குமாறும் அமைச்சர் மஹீந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார்