பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 4 சந்தேகநபர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வௌிநாடடு பயணத் தடை ஜூலை மாதம் 23 ஆம் திகதி வரை தளர்த்தப்படுவதாக கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.சட்டவிரோதமாக உழைக்கப்பட்ட 15 மில்லியன் ரூபா நிதி N.R Consultancy நிறுவனத்தில் முதலீடு செய்ததன் ஊடாக நிதி மோசடி சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக பொலிஸ் நிதிக் குற்ற விசாரணை பிரிவினால் தாக்கல் செய்த முறைப்பாடு இன்று (27) அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு இன்று அழைக்கப்பட்ட போது, சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணை நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டு அறிக்கைகள் அனைத்தும் ஆலோசனைக்காக சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றிற்கு அறிவித்தனர்.

எனினும், இந்த முறைப்பாடு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயங்களை ஆராய்ந்த நீதவான் முறைப்பாட்டை மீண்டும் ஜூலை மாதம் 23 ஆம் திகதி அழைக்குமாறும் மற்றும் குறித்த சட்டமா அதிபர் ஆலோசனை தொடர்பில் நினைவூட்டல் ஒன்றை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்குமாறும் உத்தரவிட்டார்.

இதன்போது, பிரதிவாதி நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகள் நான்கு பேர் சார்பாக முன்னிலையான சடடத்தரணி, தனது கட்சிக்காரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வௌிநாட்டுப் பயணத் தடையை எதிர்வரும் வழக்கு தினம் வரையில் தளர்த்தி உத்தரவு ஒன்றை பெற்றுத் தருமாறு கோரியிருந்தார்.

குறித்த கோரிக்கையை ஏற்ற நீதவான் குறித்த வௌிநாட்டு பயணத் தடையை எதிர்வரும் வழக்கு தினம் வரையில் தளர்த்துமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.