சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ், நாடு முழுவதிலும் பரவி, மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ளது.

தீவிர நோய்த் தடுப்பு நடவடிக்கைகளால் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் இறப்பு விகிதம் கணிசமாக குறையத் தொடங்கி உள்ளது.

இந்நிலையில் சீனாவில் மேலும் பலர் கொரோனா வைரஸூக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோரின் எண்ணிக்கை 2834 ஆக உயர்ந்திருப்பதாக தேசிய சுகாதார ஆணையம் கூறி உள்ளது.

ஒட்டு மொத்தமாக 79 ஆயிரத்து 250 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர். நேற்று புதிதாக 327 பேர் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து, புதிய நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை சரிந்து வரும் அதேவளையில், பிற நாடுகளில் இந்த வைரஸ் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. எனவே, உலகம் முழுவதும் இந்த வைரஸ் பரவுவதை தடுக்க அதிதீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை வந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.