பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அவர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவை இணைப்பேச்சாளரும் உயர் கல்வி அரமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (28) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

அரசாங்க துறையில் தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் நியமனக் கடிதங்களை வழங்கும் நடவடிக்கை ஜனாதிபதி செயலகத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடிதங்களின் பிரதிகள் மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பப்படுகின்றன. அனைத்து பட்டதாரிகளுக்கும் மார்ச் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 2021 மார்ச் 1ஆம் திகதி வரை பயிற்சிகள் வழங்கப்படும். இக் காலப்பகுதியில் இவர்களுக்கு 20,000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படும்.

இதன் பின்னர் அரச சேவை பயனுள்ளதாகவும் செயல்திறன் மிக்கதாகவும் முன்னெடுப்பதற்காக சேவை நிலையங்களில் இவர்கள் நியமிக்கப்படுவார்கள்.

இந்த நியமனத்தில் இவர்கள் 5 வருட காலம் பணியாற்ற வேண்டும்.

இதற்கு அமைவாக 50,000 பேருக்கு நியமனக் கடிதங்கள் அனுப்பப்பட்டு வருவதாகவும் அமைச்சரவை இணைப் பேச்சாளரும் உயர் கல்வி அரமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)