இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளில் இருந்து குவைட் நாட்டிற்கு செல்லும் பயணிகளிடம் இருந்து புதிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட வைத்திய சான்றிதழ் ஒன்று சமர்ப்பிக்கப்படுதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு மேலதிகமாக இந்தியா, பங்களாதேஷ், பிலிபைன்ஸ், எகிப்து, சிரியா, லெபனான், துருக்கி, அஜர்பைஜான் மற்றும் ஜோர்ஜியா ஆகிய நாடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு எதிர்வரும் 8 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வருவதாக குவைட் சிவில் விமான சேவை அதிகார சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, குவைட் நாட்டிற்கு செல்வதற்கு எதிர்பார்த்துள்ளவர்கள் அந்தந்த நாடுகளில் அமைந்துள்ள தூதரகங்களின் அனுமதியை பெற்றுள்ள வைத்திய நிலையம் ஒன்றில் தான் கொரோனா தொற்றாளர் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ் ஒன்றை பெற்றுக் கொள்ள வேண்டும்.

அந்த சான்றிதழ் இல்லாமல் குவைட் நோக்கி சென்றால் குறித்த விமானத்திலேயே அவரை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்த உத்தரவை மீறும் விமான சேவை நிறுவனங்கள் மீதும் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குவைட் சிவில் விமான சேவை அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

குவைட் நாட்டில் தற்போதைய நிலையில் 56 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.