வவுனியா – வைரவபுளியங்குளம் பகுதியில், சீனா நாட்டு பிரஜைகள் மூவரை, தனிமைப்படுத்தி, சிகிச்சையளிக்குமாறு, பொலிஸாரிடம், நேற்று முன்தினம் (13) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மன்னார் – வவுனியா பிரதான வீதி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காக, வவுனியா – வைரவபுளியங்குளம் பகுதியிலுள்ள வீடு ஒன்றில், மூன்று பொறியியல்துறை சார்ந்த சீனா நாட்டுப்பிரஜைகள் தங்கியிருந்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் பங்களாதேஷ் நாட்டினூடாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே இலங்கை வந்துள்ளார். ஏனைய இருவரும் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னரே சீனாவிலிருந்து இலங்கைக்கு விமான நிலையத்தினூடாக வருகை தந்துள்ளனர். அவர்கள் கடந்த சில வாரங்களாக வெளியே எங்கும் செல்லாமல் வீட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்டிருந்து வந்துள்ளனர்.

எனினும், அவர்களுக்கு கொரோனா தொற்கு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர்களை மருத்துவப்பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்தி வைத்திருக்குமாறும் அப்பகுதியிலிருந்து அவர்களை அகற்றுமாறும் சமூக ஆர்வலர்கள் சிலரால், ​பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, நேற்று முன்தினமிரவு 10 மணியளவில் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், சீனா நாட்டு பிரஜைகள் தங்கியுள்ள வீட்டின் பாதுகாப்பு ஊழியரிடம் விசாரணைகள் மேற்கொண்டனர்.

அத்துடன், அவர்களை அங்கு தங்கவைக்க நடவடிக்கை எடுத்த உயர் அதிகாரிகளுடனும் மாவட்டச் செயலாளருடனும் தொடர்பு கொண்டு, அவர்கள் இலங்கைக்கு வருகை தந்த ஆவணங்கள், அறிக்கைகள் என்பனவற்றை பரிசோதனை மேற்கொண்டனர்.

மேலும், அவர்களுக்கான ஆரம்ப பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.