உலகளாவிய தொற்றுநோயாக COVID 19 (கொரோனா) தொற்றுநோய் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையிலும் 15.03.2020 வரை 18 நோயாளிகள் கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

எனினும் இதுவரை வடமாகாணத்தில் கொரோனாத் தொற்றுள்ள ஒரு நோயாளரும் அடையாளங் காணப்படவில்லை. ஆனாலும் இந் நிலையில் கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான மாகாண சுகாதார சேவையினரின் பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்கள் வருமாறு:

தனிமைப்படுத்தல் (Quarantine) நடவடிக்கைகள்

இறுதியாக 15.03.2020 இல் அறிவிக்கப்பட்ட பட்டியலின்படி பின்வரும் 14 நாடுகளிலிருந்து வருபவர்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பப்பட வேண்டும்.

1. ஈரான்
2. இத்தாலி
3. தென் கொரியா
4. ஆஸ்திரியா
5. டென்மார்க்
6. ஃபிரான்ஸ்
7. ஜேர்மனி
8. நெதர்லாந்து
9. சுவீடன்
10. ஸ்பெயின்
11. சுவிற்சர்லாந்து
12. ஐக்கிய ராஜ்ஜியம் (UK)
13. பெல்ஜியம்
14. நோர்வே

மேற்படி நாடுகளிலிருந்து 09.03.2020க்கு பின்னர் நாட்டினுள் நுழைந்தவர்கள் அனைவரும் (அந்த நாட்டவர்கள், எமது புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் இங்கிருந்து அந்த நாடுகளுக்கு சென்று வந்தவர்கள்) தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பப்பட வேண்டும்.

ஏனைய நாடுகளிலிருந்து வருபவர்கள் தமது வதிவிடங்களில் இரண்டு கிழமைகளுக்கு தம்மைத் தாமே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும். மேலும் இவ்வாறனவர்கள் தங்கியுள்ள அல்லது வசிக்கும் வீட்டிலுள்ள அனைவரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். புலம் பெயர்ந்துள்ள உங்களது உறவினர்கள் அண்மைக்காலத்தில் இங்கு வருகை தரத் திட்டமிட்டிருப்பின் அவர்களை தற்போதைக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தவும். அதே போல் இங்குள்ளவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்தால் இயலுமான வரை உங்களது பயணத்தை பிற்போடவும். உங்களது வீட்டில் அல்லது அயலில் யாராவது வெளிநாட்டிலிருந்து வந்திருந்தால் உடனடியாக பொது சுகாதார பரிசோதகர் (PHI), குடும்ப நல உத்தியோகத்தர் (PHM) அல்லது கிராம சேவகருக்கு அறிவிக்கவும்.

கூட்டம் கூடுதலைத் தவிர்த்தல்

கொரோனாத் தொற்றின் காரணமாக இலங்கையில் ஏற்கனவே கூட்டம் கூடுதல் தொடர்பாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

பலர் கூடக் கூடிய நிகழ்வுகள் எதையும் தவிர்த்துக் கொள்வது அல்லது பிற்போடுவது அவசியமானது. மீறி நடக்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதிலிருந்து விலகியிருக்குமாறு பொது மக்களைக் கேட்டுக் கொள்கின்றோம் உதாரணமாக அணி விளையாட்டுக்கள், விளையாட்டுப் போட்டிகள், கலை, கலாசார நிகழ்வுகள், வழிபாட்டு இடங்கள். அத்தியாவசியமற்ற கலந்துரையாடல்கள் மற்றும் கூட்டங்கள் அனைத்தையும் பிற்போடவேண்டும்.

திரையரங்குகள், கலை நிகழ்வுகளும் இரத்துச் செய்யப்பட வேண்டியவையே.

இவற்றை மீறி இவ் வகை கூட்டம் கூடும் நிகழ்வுகள் இடம் பெற்றால் பொதுமக்கள் உடனே பொதுச் சுகாதார பரிசோதகருக்கு (PHI) அல்லது கிராம சேவகருக்கு அறிவிக்கவும்.

குடும்ப நிகழ்வுகளான திருமண நிகழ்வுகள் போன்றவற்றை பிற்போடுவது நல்லது அல்லது குறைந்தளவு ஆட்களுடன் இவற்றை நடாத்துங்கள்.

சகல வணக்கத் தலங்களிலும் பத்தர்கள் கூடுவதை தவிர்த்துக் கொள்வதுடன் திருவிழாக்கள் வழிபாடுகளை எளிமையாக நடாத்த பொறுப்பானவர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வதை இயன்றவரை தவிர்த்துக் கொள்ளவேண்டும்.

வைத்தியசாலைகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களைப் (ஏனைய நோய்களுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களைக்கூட) பார்வையிடச் செல்வதை கட்டாயமாகத் தவிர்த்துக் கொள்ளவேண்டும். நோயாளிகளுக்கு உணவு கொடுப்பதாயின் ஒருவர் மட்டும் குறுகிய நேரத்தில் சென்று வரவேண்டும். உள்ளக நோயாளிகள் உள்ள சகல அரச வைதை;தியசாலைகளிலும் தரமான உணவு விநியோகம் நடைபெறுவது கவனத்திற்குரியது.

தனிநபர் சுகாதாரம்

சகலரும் தமது தனிநபர் சுகாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். தமது வீட்டிற்கு வெளியில் செல்கின்றவர்கள் அடிக்கடி (குறைந்தது 2 மணித்தியாலங்களுக்கு ஒருமுறை) தமது கைகளை முறைப்படி கழுவ வேண்டும்.

வீட்டிற்கு திரும்பும் போது வீட்டிற்குள் செல்ல முன்னர் வாசலிலேயே கைகளை முறைப்படி கழுவுவதுடன் முகத்தையும் கழுவ வேண்டும். கைகளை முறைப்படி கழுவுவதற்கு சாதாரண சவர்க்காரமும் நீரும் போதுமானது. வேலைத்தளங்களிலும் பொது இடங்களிலும் கைகளை முறைப்படி கழுவுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். யாருக்காவது கொரோனாத் தொற்றின் அறிகுறிகளான காய்ச்சல், களைப்பு, வரட்டு இருமல் போன்றவை (சிலருக்கு உடல் நோ, மூக்கடைப்பு, தொண்டை நோ போன்றவையும் ஏற்படலாம்) ஏற்பட்டால் உடனடியாக முகத்துக்கு கவசம் அணிவதுடன் அரசாங்க வைத்தியசாலைகளை அணுகவும். இவ்வகை நோயாளிகள் ஏனைய பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளவும். குறிப்பாக வேலைத் தளங்களுக்கு செல்ல வேண்டாம்.

சுகாதாரத்துறை ஊழியர்கள்

16.03.2020 அரசாங்க, வர்த்தக வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறைகள் மேலும் அறிவிக்கப்படலாம். ஆனால் சுகாதாரத்துறையினருக்கு இவ் விசேட விடுமுறை நாட்கள் கடமை நாட்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. நாளை முதல் சகல பதவிகளிலும் சுகாதர அமைச்சு, சுகாதாரத் திணைக்களங்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள், வைத்தியசாலைகளில் கடமையாற்றும் அலுவலர்கள் உடனடியாக கடமைக்கு திரும்ப வேண்டும்.

பல்துறைசார் கலந்துரையாடல்

நாளை (17.03.2020) காலை 10 மணிக்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரால் அழைக்கப்பட்டுள்ள சகல திணைக்களத் தலைவர்களுக்குமான (அழைப்பிதழ் அனுப்பப்பட்டவர்கள்) கலந்துரையாடல் கட்டாயமாக நடைபெறும் என்பதையும் அறியத்தருகின்றோம்.

வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன்
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வட மாகாணம்.
16.03.2020