நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் கட்சிகள் தமது வேட்பு மனுக்களை இன்று (18) தாக்கல் செய்தனர்.யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று காலை 8.00 மணிமுதல் கட்சி தலைவர்களுடன் வருகை தந்து தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

அந்தவகையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக, முதன்மை வேட்பாளர் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடன், எம்.ஏ. சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறிதரன், இம்மானுவேல் ஆர்னோல்ட், திருமதி ரவிராஜ் உள்ளிட்ட வேட்பாளர்களும் வருகை தந்திருந்தனர்.

ஐக்கிய தேசிய முன்னணியில், முதன்மை வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையில், வேட்பாளர்களும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பாக, முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில், க.பிரேமசந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட வேட்பாளர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பாக, முதன்மை வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில், செல்வராசா கஜேந்திரன், மற்றும் திருமதி, வாசுகி உள்ளிட்டவர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பாக, அங்கஜன் இராமநாதன் தலைமையில், சங்கரப்பிள்ளை பத்மராஜா, கந்தையா தியாகலிங்கம், பரணிரூபசிங்கம் வரதராஜசிங்கம், உள்ளிட்ட வேட்பாளர்கள் வருகை தந்ததுடன், ஏனைய கட்சிகள், சுயேட்சைக் குழுக்களும் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.