அனுராதபுர சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையினை தொடர்ந்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் துலான் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் இன்று (21) மாலை ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை தொடர்ந்து பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த 5 கைதிகள் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் துலான் சமரவீர தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை தொடர்ந்து சிறைச்சாலையில் இருந்து கைதிகள் சிலர் தப்பிச் செல்ல முற்பட்ட போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர் என சந்தேகிக்கும் கைதி ஒருவர் சில தினங்களுக்கு முன் குறித்த சிறைச்சாலையில் இனங்காணப்பட்டு அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் சிறைக் கைதிகள் இன்று (21) அமைதியற்ற விதத்தில் செயற்பட்டனர்.

இதன்போது சிறைச்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.