இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி இதுவரை 80 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களுக்கு மேலதிகமாக தற்போதைய நிலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் 245 பேர் நாடு பூராகவும் உள்ள 18 வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நாட்டின் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு தனிமைப்படுத்தல் நிலையங்கள் 22 இல் 3063 பேர் தற்போதைய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக கொவிட் 19 வைரஸை தடுக்கும் செயற்பாட்டு குழு குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டவர்கள் 31 பேர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளவர்களுக்கு இடையில் உள்ளதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக சுகாதார பிரிவு, புலனாய்வு பிரிவு, இராணுவம், பொலிஸ் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களால் இனங்காணப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கையின் கீழ் உள்ளனர்.

இதேவேளை வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு மற்றும் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக நாடு பூராகவும் 30 வைத்தியசாலைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. .

தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களில் இனம் காணப்படும் தோற்றாளர்கள் அங்கொடை மற்றும் வெலிகந்த ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.