மக்கள் வீதிகளில் நடமாடித் திரிவதையும் கூட்டம் கூடுவதையும், பொருள் கொள்வனவில் ஈடுபடுவதையும் தவிர்ப்பதற்காக, ஊரடங்குச்சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் எவ்வாறான கெடுபிடிகளை மேற்கொள்ள வேண்டும் என்று, பொலிஸ் மா அதிபர் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்தலொன்றை விடுத்துள்ளார்.

இதற்கமைவாக, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், தனியார் மருந்தகங்கள், பல்பொருள் அங்காடிகளை மூடுமாறு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒசுசல உள்ளிட்ட அரச மருந்தகங்களைத் தவிர ஏனைய மருந்தகங்களைத் திறப்பதற்கு,  தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  சகல பொலிஸ் பிரிவுகளிலுமுள்ள மக்கள் எந்த​வொரு காரணங்களுக்காகவும் பிரதான வீதிகள், குறுக்கு வீதிகளில் கூடுவதற்கோ வீடுகளிலிருந்து வெளியேறவோ அனுமதியளிக்கப்படாதென்றும்  இது தொடர்பில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை ​கடுமையாக அமுல்படுத்துமாறு, சகல பொலிஸ் நிலையங்களுக்கும் பதில் பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.