யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டத்தை இறுக்கமாக நடைமுறைப்படுத்தத் தீர்மானித்துள்ளமையால், பொதுமக்கள் அவதானத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென, யாழ்.மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், பொதுமக்களின் அத்தியவசியத் தேவை தொடர்பில், கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், பொருள்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றை அந்தந்த பிரதேச செயலாளர்கள் முன்னெடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் நேற்று மாலை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட தகவல் பொதுமக்களுக்கு தாமதமாக சென்றுள்ளதாகத் தெரிவித்த அவர், ஊரடங்கு வேளையில் பொதுமக்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மீனவர்களும் விவசாயிகளும் தமது தொழிலைச் செய்வதற்கு, அந்தந்தப் பிரதேச செயலாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடி, தேவையான உதவிகளைச் செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.