எஸ்.நிதர்ஷன்-
யுத்தத்தைக் கட்டுப்படுத்தியது போன்று கொரோனோவையும் கட்டுப்படுத்துவோம் என விமல் வீரவன்ச போன்றோர் கூறுவது அவர்களது; அறிவீனத்தைக் காட்டுவதாகத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்தன் விமல்விரவன்ச போன்றோர் விதண்டாவாதம் கதைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்றும் கேட்டுள்ளார்.யாழ் கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின்; போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது..
பாராளுமன்றத்தைக் கூட்டப்பட வேண்டுமென்ற கோரிக்கை பரவலாக வைக்கப்பட்டு வருகின்றது. அதிலும் எதிர்க்கட்சிகளால் இந்தக் கோரிக்கை தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டுக் கொண்டு தான் வருகின்றது. அதே போல அரசிலுள்ள ஒரு சிலரும் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டுமென்பதில் விருப்பம் காட்டுகின்றனர்.
ஆனால் விமல் வீரவன்ச போன்றவர்கள் நாங்கள் யுத்தத்தையே கட்டப்படுத்தியவர்கள் ஆகவே இந்த வைரஸ் தாக்கத்தையும் தனிய அரசாங்கமாகவே நாங்கள் கட்டுப்படுத்துவோம் என்று தமது கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.
உண்மையில் அவ்வாறு கூறுவதென்பது அவர்களுடைய அறிவீனத்தை மிகத் தெளிவாக காட்டுகின்றது. ஏனென்றால் கொரோனோ வைரஸ் தாக்கத்திற்கும் யுத்தத்திற்கும் இடையிலான பாரிய வித்தியாசத்தை தெரியாமலே அவர்கள் கதைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று தான் நான் கருதுகின்றேன்.
இந்த வைரஸ் என்பது யாருக்கும் வரலாம். உலக நாடுகளின் பல தலைவர்களுக்கு கூட இந்த நோய்த் தாக்கம் வந்திருக்கிறது. குறிப்பாக யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொண்டிருப்பீர்கள் சாதாரண பொது மக்கள் தான் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் இந்த நோய் என்பது அப்படியல்லை யாரையும் பாதிக்கும்.
ஆகவே விதண்டாவாதங்களை ஏட்டுக்குப் போட்டி கதைகளை எல்லாம் விட்டு இந்த அனைத்துக் கட்சிகளும் அனைத்து தலைவர்களும் என ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து இந்த கொரோனோ வைரஸ் நோயை எதிர்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இது நாட்டுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனை அனைவரும் உணர்ந்து கொண்டு செயற்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.