(எஸ்.நிதர்ஷன்-)

பொது மக்கள் ஓவ்வொருவரும் மனக்கட்டுப்பாட்டுடன் மருத்துவதுறையினரின் ஆலோசனைகளைப் பின்பற்றி அவதானமாகச் செயற்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.யாழ் கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின்; போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது..

உலக நாடுகள்பலவற்றிலும் கொரோனோ தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் அதன் தாக்கம் இலங்கையிலும் ஏற்பட்டிருக்கின்றது. அதே நேரத்தில் இலங்கை அரசாங்கம் எடுக்கின்ற நடவடிக்கைகள் ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தாலும் இந்த வைரஸ் தொற்று சில வேளைகளில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று மருத்துவத் துறையினர் எச்சரித்துக் கொண்டு இருக்கின்றனர்.

ஆகையினால் மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டுமென்றும் மருத்துவ துறையினரால்  அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர். எனவே இன்றைக்கிருக்கின்ற நிலைமையில் மக்கள் ஒவ்வொருவரும் உண்மையிலே மருத்துவத் துறையினரின் ஆலோசனைகளைப் பின்பற்றி மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமானது.
அதற்கமைய தன்னைத் தாமே தனிமைப்படுத்தி கூடியளவில் கூட்டமாகச் சேரமலும் வெளியே செல்லாமல் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செயற்படுவதனூடாக இந்த நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும். ஆகவே மக்கள் கொஞ்ச நாளைக்கு மனதைக் கட்டுப்படுத்தி தனிமைப்படுத்தி இருக்கும் படி தாழ்மையாக கேட்டுக் கொள்கிறேன்.

ஏனென்றால் இது மிகப் பயங்கரமான வைரஸ் நோய். இந்த நோய் பெரிய அளவிலே பரவினால் மிகப் பாரியளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும். அரசாங்கம் அமுல்ப்படுத்தியுள்ள ஊரடங்குச் சட்டம் மற்றும் வைத்தியர்களின் ஆலோசனைகள் மாத்திரம் கொரோனோ வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாது. ஆகையினால் ஒவ்வொருவரும் மனக்கட்டுப்பாட்டுடன் நடந்தால் தான் இதனைக் கட்டப்படுத்திவிட முடியும்.