கொவிட் – 19க்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில்,ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோ நிதியுதவி வழங்குவதற்கு முன்வந்துள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட செயலணியின் கூட்டம், நேற்று (08), செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தமையைில் நடைபெற்றபோது, அக்கூட்டத்தில், ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளின் துாதுவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போதே, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு உதவும் வகையில், 22 மில்லியன் யூரோக்களை வழங்குவது குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

மேலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து, இலங்கையில் தங்கியிருக்கும் சுற்றுலாப்பயணிகளை மீண்டும் பாதுகாப்பாக அவர்களது நாடுகளுக்கு அனுப்பிவைப்பதற்கு அனைத்துத் தரப்பினரதும் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளுதல், சுகாதார, பொருளாதாரத் துறைகள் சார்ந்து எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுதல் என்பன தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த கலந்துரையாடலில் ஜேர்மனி, நெதர்லாந்து, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் தூதுவர்கள் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.