திருமதி கமலபாஸ்கரன் ஈஸ்வரி அவர்கள் 11.04.2020 சனிக்கிழமை லண்டனில் காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.இவர் தமிழ் தேசியத்தின் மீதும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் மீதும் தீவிர பற்றுக் கொண்டு, ஆயுதப்போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்து தனது பங்களிப்பினையும் ஆலோசனைகளையும் வழங்கிய அமரர் சின்னையா கமலபாஸ்கரன் அவர்களின் துணைவியார் ஆவார்.

அமரர் சின்னையா கமலபாஸ்கரன் அவர்கள் அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் லண்டனில் எமது கட்சித் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பொறுப்பில் முதன்முறையாக கிளை ஆரம்பித்த காலத்திலும் ஒன்றாய் செயற்பட்டதோடு திருமதி கமலபாஸ்கரன் ஈஸ்வரி அவர்கள் அங்கிருந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளை கட்டுரைகளாகவும் அறிக்கைகளாகவும் ஆங்கிலத்தில் வெளியிடுவதற்கு உறுதுணையாய் நின்றார்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தோழர் க. உமாமகேசுவரன் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட போது இருவரும் தொடர்ந்து தமது பங்களிப்புகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வந்ததோடு இந்தியாவிலும் உமாமகேசுவரன் அவர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்து பல பணிகளைச் செய்து வந்தார்கள்.

திருமதி கமலபாஸ்கரன் ஈஸ்வரி அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்ப உறவுகள் மற்றும் நண்பர்களுடன் எமது ஆழ்ந்த துயரினை பகிர்ந்து கொள்வதோடு துயரந் தோய்ந்த எமது அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி. (DPLF)