கொரோனா தொற்று காரணமாக, வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்கள்  சிலர், தம்மை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலண்டன், இந்தியா, டுபாய், மாலைத்தீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்த இலங்கையர்கள் சிலரே இவ்வாறு இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது இந்தியாவில்; 600க்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள் உயர் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன், மே மாதம் 3ஆம் திகதி வரை இந்தியாவில் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதால் தாம் மிகவும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் இந்த மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளிகள் மூலம் பதிவிட்டுள்ளனர்.

அதேபோல் விசேட வைத்திய பயிற்சிக்காக பிரித்தானியாவுக்குச் சென்றுள்ள 85 இலங்கையைச் சேர்ந்த வைத்தியர்களின் பயிற்சிகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதால், இவர்களும் இலங்கைக்கு தம்மை மீள அழைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அத்துடன் மாலைத்தீவு, டுபாய் ஆகிய நாடுகளில் பல்வேறு தேவை நிமித்தம் தங்கியிருக்கும் இலங்கையர்கள் சிலரும் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்