தோழர் இரா.ஜெயசந்திரன் (பார்த்தன்)
பிறப்பு: 06.07.1959.
விதைப்பு: 24.04.1984.புரட்சியாளர்கள் என்றால் வன்முறையின் மீது நம்பிக்கை கொண்டவர்கள், ஆயுதங்களை கொண்டு திரிவதில் ஆர்வமுடையவர்கள் என்றெல்லாம் எமது பொதுபரப்பில் ஒரு புரிதல் இருக்கின்றது.

உண்மையில் புரட்சியாளர்கள் வன்முறைமீது நம்பிக்கை கொண்டவர்களா? இரத்த வெறி கொண்டவர்களா? உயிரின் மதிப்பை உணராதவர்களா? பகத் சிங் இவ்வாறு பதிலளிக்கிறார். ‘மனித உயிர்களை வார்த்தைகளால் வடிக்க முடியாத அளவுக்கு புனிதமானதாகக் கருதுபவர்கள் நாங்கள். அது மட்டுமல்ல, மனிதகுல விடுதலைக்காக வெகுவிரைவில் எங்கள் உயிர்களையே நாங்கள் அர்ப்பணிக்க இருக்கிறோம். மனச்சாட்சியின் உறுத்தல் கொஞ்சமும் இன்றி கொலை செய்வதற்கென்றே பயிற்றுவிக்கப்பட்ட ஏகாதிபத்திய ராணுவத்தின் கூலிப் படைகள் போன்றவர்கள் அல்ல நாங்கள். மனித உயிர்களை நாங்கள் உயர்வாக மதிக்கிறோம்.’ நாடாளுமன்ற வெடிகுண்டு வழக்கில் கைதான பகத் சிங், பி.கே. தத் இருவரும் அளித்த வாக்குமூலத்தில் இந்த முழக்கம் இடம்பெறுகிறது.

தோழர் பார்த்தன் ஆயுதத்தில் மட்டுமே ஆர்வம் உடைய ஒரு போராளியாக இருக்கவில்லை. பண்பாக பழகுபவராவும், மனிதநேயத்தின் மான்பினையும், உயிர்களின் உன்னதத்தினையும் உளதார புரிந்தவராக இருந்தார். அத்துடன் மார்க்சிச கருத்துக்களோடு தன்னை பொருத்தி பார்ப்பதோடு, மக்களை அரசியல் மயப்படுத்தாது முழுமையானதொரு அடக்குமுறையில் இருந்து அவர்களை மீட்டெடுக்க முடியாது என்பதில் அசையாத நம்பிக்கை உடையவராக இருந்தார். தமிழ் ஈழ விடுதலை புலிகளின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவராக இருந்த பார்த்தன், மார்க்சிச கருத்துக்களில் ஆர்வமும் , ஆளுமை மிக்கவர் என்றும் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் எழுதிய கணேசன் ஐயர் குறிப்பிட்டு உள்ளார். இது ஒரு வரலாற்று சாட்சியம் ஆகும்.

உழைக்கும் மக்களின் மறுவாழ்விற்காகவும் , பாகாப்பிற்காகவும் அயராது செயற்பட்ட பார்த்தன் ,திருமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மாணவராக கல்வி கற்ற பொழுது சிங்கள கல்வி திணிப்பிற்கு எதிராக குரல் கொடுத்ததோடு இதற்கு எதிராக கடையடைப்புக்கள், வேலை நிறுத்தங்களை முன்னின்று நடத்தியிருந்தார். வேறு மொழிகளை கற்பதில் தவறு இல்லை ஆனால் அதனை கட்டாயமாக எம்மீது திணிப்பதையினையே நாம் எதிர்க்கின்றோம் என்று 1970 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட இந்த சிங்கள திணிப்பிற்கு எதிராக மாணவர்கள் மத்தியில் விளக்க உரைகளை நிகழ்தியிருந்தார்.

தமிழ் ஈழ விடுதலை புலிகளின் ஆரம்பகால உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் பயிற்ச்சி முகாம்களை நடத்திவந்த இவர், 1977 ஆம் ஆண்டு பேரினவாத வெறியர்களினால் எமது மக்கள் மீது ஏவி விடப்பட்ட காடைத்தனங்களில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக ஆயுதம் ஏந்தி போராடினார். மக்களை பார்வையாளர்களாக வைத்துக் கொண்டு இளைஞர்கள் மட்டுமே ஆயுதம் ஏந்தி போராடுவதினாலோ, அல்லது இராணுவ வெற்றியினை மட்டுமே ஈட்டுவதனாலோ எமது இனம் முழுயான விடுதலையை பெறமுடியாது என்பதில் நம்பிக்கையும் தெளிவும் கொண்டிருந்தவராக பார்த்தன் காணப்பட்டார்.

தமிழ் ஈழ விடுதலைக் கழகம் இத்தகைய கோட்பாடுகளையும், கொள்கையினையும் கொண்டிருந்ததோடு, நீண்டகால போராட்டக் கொளகையினை உள்ளடக்கிய அமைப்பாகவும் இருந்தமையினால் 1980 ஆம் ஆண்டு பார்த்தன் தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டார்.தமிழ் ஈழ விடுதலைக் கழகம் பின்னாளில் தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகமாக பரிணமித்தது குறிபிடத்தக்கதாகும்.

அன்றில் இருந்து கழகத்தின் திருமலை மாவட்ட செயலாளராக அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்ததோடு , திருமலை காந்தீய அமைப்பின் செயலாளராகவும் செயற்பட்டு வந்தார். இந்த காலகட்டங்களில் பேரினவாதிகளினால் மலையத்தில் இருந்து அடித்து விரட்டப்பட்ட மலையக மக்களை காந்திய அமைப்பின் மூலம் வட கிழக்கு பகுதிகளில் குடியமற்றுவதில் அவரின் பங்களிப்பு திறன்பட இருந்தது. ஆயுதங்களின் அவசியமும், அது எந்த நேரங்களில் பாவிக்கப்பட வேண்டும் என்பதில் தெளிவான புரிதலும் கொண்டிருந்த பார்த்தன், மக்களை எழுச்சி கொள்ள வைப்பதற்காகவும், போராட்டத்தில் அவர்களின் வகிபாகம் (The role of the people in the liberation struggle) எந்த வகையில் அமையவேண்டும் என்பதினை பரப்புரை செய்யும் நோக்கத்தோடும் விடுதலை என்ற செய்திதாளின் ஆசிரியாக செயல்பட்டு வந்தார்.

1983 ஆம் ஆண்டு மேன்காமம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஆசிரியர் பணி இவருக்கு கிடைத்து இருந்தது. இந்த நிலையில் இனவாத அரசினால் கொண்டுவரப்பட்ட பிரிவினை எதிர்ப்பு சத்திய பிரமானத்தை ஏற்றுக்கொள்ளாது ஆசிரியர் பணியினை துறந்ததோடு தலைமறைவு வாழ்க்கையினை தொடரவேண்டிய நிலைக்கு உள்ளானார். கவர்சியான தோற்றமும், தனது பாதுகாப்பு தொடர்பான அலட்சியமும் கொண்டிருந்தவருமான பார்த்தன் ஒரு தடவை கொக்குவில் பகுதியில் தோழர்களுடன் குழுமி இருந்த வேளை , இராணுவத்தின் சுற்றி வளைப்பிற்கு உள்ளாகியிருந்தார், ஆயுதம் அரிதாகவே கிடைத்திருந்த அந்த காலகட்டத்தில் படையினருடன் துப்பாக்கி சமரில் ஈடுப்பட்டு , அங்கிருந்த தோழர்கள் பாதுகாப்பாக தப்பி செல்லுவதற்கு துணிவாக செயலாற்றி இருந்தார்.

1983 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம்23 ஆம் திகதி இடம் பெற்ற மட்டக்களப்பு சிறையுடைப்பில் முக்கிய பங்காற்றியதோடு சிறை மீண்டவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதிலும் மிகக் கவனத்தோடு செயலாற்றி இருந்தார்.
வட கிழக்கில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களுக்கான விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டதோடு மட்டும் அல்லாது மலையக மக்களை ஒடுக்கு முறையில் இருந்து மீட்டெடுப்பதற்கான உரிமை போராட்டத்திற்கு அவர்களை தயார் படுத்தும் நடவடிக்கைகளிலும் அவரின் செயற்பாடுகள் அமைந்திருந்தன. அவர்களுக்கு ஆயுத பயிற்சிகளை கொடுத்து வந்ததினை அரச தரப்பு அறிந்து கொண்டதினால், இவரை கண்ட இடத்தில் சுட்டுக் கொல்லுமாறு படைதரப்பிற்கு உத்தரவு பிறப்பித்து இருந்தது.

1984 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மட்டக்களப்பு களவாஞ்சிக்குடி பகுதியில் அரச படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட தோழர் பார்த்தன், கடும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்ட்டார். அங்கிருந்த பொலிசாரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முற்பட்டவேளை பொலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார்.

தனது இனம் தன்மானத்தோடு வாழவேண்டும் , சுதந்திர காற்றினை சுவாசிக்க வேண்டும் என்பதற்காக தோழர் பார்த்தன் தனது உயிரை வித்திட்ட பொழுது 25 வயது மட்டுமே ஆன வசீகரமான வாலிபராகவே இருந்தார். தனது இனம் வருங்காலத்தில் சுபீட்சமாக வாழவேண்டும் என்பதற்காக தனது வாலிப வயதிற்கே உரித்தான ஆசா பாசங்களை எல்லாம் எமது பாசத்திற்கு உரிய பார்த்தன் துறவு கொண்டார். புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை, அவர்கள் விதைக்கப் படுகின்றார்கள். போராளிகள் மாண்டு போவதில்லை , அவர்கள் மீண்டு வருவார்கள். தமிழ் இனம் என்னும் பயிரை காப்பதற்கு தனது உயிரை உரமாக்கி சென்றுவிட்டார் எங்கள் தோழன் பார்த்தன்.. எமது இனம் இந்த உலகில் வாழும் வரையில் அவர்கள் மனம் நிறைய என்றும் வாழ்வார்.

செ. குணபாலன்.
24. ஏப்ரல். 2020.