18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. 1886-ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமே இன்று உலகம் முழுவதும் மே தினமாக கொண்டாடப்படுகிறது. இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தோழர்கள் ஆல்பர்ட் பார் சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங் கல், அடால்ப் பிட்சர் ஆகியோர் தங்களது இன்னுயிரை இதற்காக விலையாக தரவேண்டியிருந்தது. தொழிலாளர் தலைவர்கள் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் நிகழ்த்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம் உலகம் எங்கிலும் எதிரொலித்த போதும் இதற்கு முன்னராக தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 12 -18 மணித்தியாலங்கள் கட்டாய வேலை செய்வதற்கு நிர்பந்திக்கப் பட்டமைக்கு எதிராக போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் சாசன இயக்கம் (chartists) ஆகும். சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கையாகும். 1830 களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834 இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன. ஆஸ்ரேலியாவின் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1956 இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.
தொலிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக கிளர்தெழுந்த நாள் மே தினமாக கொண்டாடப் படுகின்றபோதும், சிறப்பாக சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டு தாழ்த்தப்பட்டு இம்சைப்படுத்தப்பட்ட அடிமை மக்கள் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் அடைய வேண்டும் என்கின்ற உணர்ச்சியே மே தினக் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாகும். ஏழை விவசாயிகளையும் தொழிலாளர்களையும் அடித்தட்டு மக்களையும் தீண்டத்தகாதவர்களையும் அவர்களுடைய சங்கிலிகளை உடைத்தெறிந்து விடுவிக்கவேண்டியது புரட்சிகர அமைப்புகளினதும், மக்களை வழிநடத்துகின்ற கட்சிகளினதும் கடமையாகும். இதனுடைய அடிப்படை தந்துவங்களையும் அதற்கான பாதைகளை நோக்கிய போராட்டத்தினையும் முன்னிலைப்படுத்தியே 1980 இல் , தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம் (Peoples’s Libration of Tamil Eelam,PLOTE) அனைத்து அடக்கு முறைகளை உடைத்தெறிவோம் என்ற வாசகத்தினை பிரதான கோசமாக கொண்டிருந்தது.
சுரண்டல்களுக்கு உள்ளாகும் தொழிலாளர்கள், தீண்டத்தகாதவர்களாக கருதப்படும் ஒடுக்கப்பட்ட மக்கள் , கால தேவைகளுக்கு ஏற்ற வகையில் திட்டமிடப்பட்டு உயர்மட்டத்தினரால் தரம் பிரிக்கப்பட்டு தம்மை அறியாமலே பாதிப்பிற்கு உள்ளாகினர். அடக்கு முறைகளும், சுரண்டல்களும் எங்கே வேர் கொள்கிறது, எப்படித் தன் கிளைகளைப் பரப்புகிறது, எங்கிருந்து பலம் பெறுகிறது, மாறும் சூழலில் எப்படித் தன்னை தங்க வைத்துக்கொள்கிறது உள்ளிட்ட அனைத்தையும் அறிந்து கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு மக்களை பிரநிதித்துவ படுத்தும் அமைப்புகள் தவறிவந்துள்ளன.
கோவிட் 19 தொற்று நோயினால் ஏற்பட்ட தாக்கத்தினால் தினக் கூலிகள், வியாபர நிலையங்களில் பணி புரியும் தொழிலாளர்கள், தொழில்சாலை தொழிலாளிகள் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் பலருக்கான ஊதியங்களுக்கு உத்தரவாதம் இல்லாத நிலையே காணப்படுகின்றது. அங்கும் இங்குமாக உலர் உணவு பொருட்கள் புலம் பெயர்ந்து வாழும் உறவுகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோர்களினால் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆனாலும் இவைகளும் அவர்களின் முழுமையான தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு போதுமானதாக இல்லாது உள்ளதோடு, நிலமை சீராகும் போது இவர்களில் பலர் தமது தொழில்களை மீண்டும் பெறுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. அரச தரப்பு மற்றும் முதலாலித்துவ நிறுவனங்களிடம் இவர்களுக்கான காப்புறுதி திட்டங்கள் முறையாக நிறுவனப் படுத்தாமல் இருப்பதோடு , இவர்களில் பெரும் பகுதியினர் முதுமை நிலை வரும்பொழுது ஓய்வூதியம் இல்லாதவர்களாக கொடிய வறுமைக்கு உள்ளாகும் நிலையிலேயே அவர்களின் வாழ்வு நிலை உள்ளது.
மே தின கூட்டங்களை கோலகலமாக நடத்துவதிலும், சிகப்பு கொடிகளை பறக்கவிடுவதினாலும் இவர்களின் வாழ்வியல் மாறிவிடப்போவதில்லை. கட்சிகளும் , அரசு சார் அமைச்சர்களும் இதனை புரிந்து கொள்ளவேண்டும். அத்தோடு விடுதலை சார்பு கட்சிகள் மற்றும் இயங்கங்கள் ஒரு கோட்பாடு செயற்பாட்டாளர்களாக மாறாத வரையில் உழைப்பாளர்களின் வாழ்வில் உன்னதம் ஏற்பட போவதில்லை. வர்க்க அலசல் என்பது வெறும் கோட்பாடு சார்ந்ததாகவோ வெட்டவெளியில் நிகழ்வதாகவே இருக்கக்கூடாது. நடைமுறை யதார்த்தத்தைக் கணக்கில் கொண்டதாக இருக்கவேண்டும் என்று லெனின் கூறியமை எல்லா காலங்களுக்கு பொருந்திய ஒரு கருத்தியலாகும். தொழில் சங்கங்களும், கம்யுனீஸ்ட்டுக்கள் என்று கூறிக்கொள்ளும் சில கட்சிகளும் தொழிலாளர்களின் பிரட்சனைகளை தமக்கு சாதமாக பயன்படுத்தி கொள்வதினையும் நாம் பார்த்து வந்திருக்கின்றோம்.
கம்யூனிசத்திற்கும், தேதியவாதத்திற்கும் இடையில் தொழிலாளர்கள் பிளவுபடுத்தப் பட்டார்கள். இலங்கையில் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடுவதாக கூறிவந்த கம்யூனிஸவாதிகள் சிலர் தேசியவாதம் என்ற பெயரில் இனவாதிகளாகிப் போனார்கள். இவர்களின் இத்தகைய இரட்டைப் போக்கினால் இலங்கை தொழிலாளர்கள் இணைந்து கொள்வது சாத்தியம் இல்லாமல் போயிற்று. புரட்சி சாத்தியப்பட்டால் அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள். சாதியம் , அடிமைதனம் எல்லால் அற்றுப் போய்விடும், என்று மார்க்சிய சித்தாந்தம் பேசியவர்கள் சிறுபான்மையின தொழிலாளர்களின் நம்பிக்கையினை இழந்து போனார்கள். இலங்கையில் தோழிலாளர்கள் ஒற்றுமைபட வேண்டும், அவர்களிடையே, சாதியம், இனவாதம், ஏற்ற தாழ்வு என்பது இல்லாமல் போகவேண்டும் என்று சோசலிஸ்டுக்கள் விரும்பினால் , சமூகச் சீர்திருத்தம் மற்றும் சமூக ஜனநாயகம் அடிப்படையானது என்பதை அவர்கள் ஏற்கவேண்டும். அது சாத்தியமாகாத வரையில் மே தினம் என்பது ஒரு கொண்டாட்ட விழாக்களாக வருடம் தோறும் வந்து போகும்.
உலக தொழிலாளர்களின் உயர்விற்கு தோள் கொடுப்போம். அனைத்து அடைக்கு முறைகளையும் உடைத்தெறிவோம்.
செ.குணபாலன்.
மே. 01. 2020.