யாழ். வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த பொலிஸார், அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதனையடுத்து, பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான பெண்கள் மூவர் காயமடைந்த நிலையில் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாளிகைத்திடல் அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள குறித்த வீட்டுக்கு நேற்று (30) சென்ற பொலிஸார் வீட்டு வளவினுள் நின்ற வாகனத்தை அத்துமீறி எடுத்து செல்ல முற்பட்டுள்ளனர்.

அதற்கு வீட்டார் எதிர்ப்பு வெளியிட்ட நிலையில், வீட்டாருக்கும் பொலிஸாருக்கும் இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அதனை வீட்டில் இருந்த சிறுவன் அலைபேசியில் காணொளி எடுத்துள்ளார். அதனையடுத்து, அலைபேசியை பறித்த பொலிஸார் காணொளியை அழித்ததுடன் சிறுவனை தாக்கவும் முற்பட்டுள்ளனர்.

வீட்டாரின் அபய குரல் கேட்டு அயலவர்கள் கூடியதனால் பொலிஸார் காணொளியை வெளியிட வேண்டாம் என்றும், சம்பவம் தொடர்பில் எங்கேயும் முறைப்பாடு செய்ய கூடாது என அச்சுறுத்திவிட்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் இன்று (01) குறித்த வீட்டுக்கு சென்ற பொலிஸார் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த பெண்கள், வயோதிபர்கள், சிறுவர்கள் என வேறுபாடு இன்றி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பொலிஸாரின் தாக்குதலில் வீட்டிலிருந்த பெண் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார். வீட்டாருடைய அபயக்கூரல் கேட்டு அயலவர்கள் அங்கு சென்ற போது, அவர்கள் மீதும் பெண்கள், வயோதிபர்கள் என்ற வேறுபாடு இன்றி கண்மூடித்தனமாக பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது, பொலிஸாரின் தாக்குதலால் மயக்கமடைந்த பெண் உட்பட மூன்று பெண்கள் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.