தபால் சேவையை திறம்பட முன்னெடுக்கும் நோக்கில் தபால் தொழிற்சங்கங்களுடன் பல சுற்று கலந்துரையாடல்களை நடத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து தபால் நிலையங்களின் தபால் சேவைகள் நாளை (04) ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தாலும் அவ்வாறு தபால் நிலையங்களை திறக்க முடியாது என அஞ்சல் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

எனினும் இன்று பிற்பகல் நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய அஞ்சல் பணிகளை வழக்கம் போல் தொடர தமது ஆதரவை வழங்குவதாக அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எச்.கே.காரியவாசம் தெரிவித்துள்ளார்.

இதனையே மக்கள் தபால் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜயந்த விஜேசிரியும் கூறினார்.

இதேவேளை அஞ்சல் சேவையை திறம்பட முன்னெடுக்க அஞ்சல் தொழிற்சங்கங்களுக்கும் துறைக்கு பொறுப்பான அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கும் இடையில் இன்று பிற்பகல் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போதே தபால் சேவையை திறம்பட முன்னெடுக்கும் நோக்கில் தபால் தொழிற்சங்கங்களுடன் பல சுற்று கலந்துரையாடல்களை நடத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.