நாடுகளுக்கிடையேயான சில பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியதைத் தொடர்ந்து, உலகில் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் திறக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், அந்தந்த நாட்டு பயண ஆலோசனைகளின் கீழ், லண்டன், டோக்கியோ, மெல்பேன், ஹொங்கொங் ஆகிய நாடுகளுக்கான விமான  சேவையை ஆரம்பிக்கவுள்ளது.

இது தொடர்பாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸால், இன்று (12) விடுக்கப்பட்ட ஊடக அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம், இந்த நாட்டுகளுக்குப் பிரயாணம் செய்ய நினைப்போர், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகாரிகளிடமோ அல்லது அருகிலுள்ள முகவர்களிடமோ டிக்கெட்டுகளைக் கொள்வனவு செய்துகொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, பெரும்பாலான அரசாங்கங்கள், வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் பயணிகளை அந்தந்த நாடுகளுக்கு தனிமைப்படுத்தல் காலங்களுக்கு உட்படுத்தப்பட்டதற்கான, செல்லுபடியான சான்றிதழ்களுடன், சொந்த நாடுகளுக்குத் திரும்புவதற்கு அனுமதி அளித்து வருகின்ற நிலையிலேயே, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸும், இன்று (13) முதல், விசேட பயணத்திட்டத்தின் கீழ் செல்ல முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விமானங்கள், பயணிகளுக்காகவும் சரக்குகளுக்காகவும் செயற்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர், 0197331979 எனும் உலகளாவிய தொடர் மய்ய இலக்கத்தையோ அல்லது ஏதேனும் பயண முகவரையோ தொடர்பு கொள்ள முடியும் என்றும் கோரப்பட்டுள்ளது.