உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் குண்டு தாக்குதலை நடத்தியவரிடம் 32 வங்கிக் கணக்குகள் இருந்தாக  தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று தெரியவந்துள்ளது.

குற்ற புலனாய்வுத் துறையின் தலைமை பரிசோதகர் யசஸ் சுவர்ண கீர்த்திசிங்க இன்று ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கையில் கிங்ஸ்பெரி விருந்தக தாக்குதல் நடத்தியவர் சஹரான் ஹாசீமின் சாரதி என கூறினார்.

தாக்குதல் நடத்தப்பட்ட போது கிங்ஸ்பெரி ஹோட்டலின் பாதுகாப்பு பணிப்பாளராக செயல்பட்ட ஓய்வு பெற்ற பிரதி பொலிஸ்மா அதிபர் ஐவன் தம்மிக துடுவத்த நேற்று முன்தினம் (21) ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கினார்.

அப்போது ஏப்ரல் 17, 2019 அன்று ஹோட்டலுக்கு வந்த ஒருவர், ´அப்துல்லா´ என்ற பெயரில் அறை ஒன்றை முன்பதிவு செய்து, 20 ஆம் திகதி அங்கு வந்து தங்குவதாக கூறி சென்றதாக அவர் சாட்சியம் அளித்தார்.

கிங்ஸ்பெரி ஹோட்டல் குண்டு தாக்குதல் குறித்து நேற்று (22) குற்ற புலனாய்வுத் துறையின் தலைமை பரிசோதகர் யசஸ் சுவர்ண கீர்த்திசிங்கவிடம் சாட்சியம் பெற்றுக்கொள்ளப்பட்டது.

சாட்சியம் வழங்கிய அவர், ஹோட்டலின் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பின்னர், குண்டு தாக்குதலை நடத்தியவர் மொஹமட் அசாம் மொஹமட் முபாரக் என அடையாளம் காண்டதாக தெரிவித்தார்.

தாக்குதலுக்கு முன்தினம் இரவு, தாக்குதல்தாரி சிவப்பு காரில் ஹோட்டலுக்கு வந்ததாக தெரிவித்து அது குறித்த சி.சி.டி.வி காட்சிகளை ஆணைக்குழுவில் முன்வைத்தார்.

அவ்வாறு வருகைத்தந்தவர் ஹோட்டலின் வரவேற்பாளர்களிடம் சென்று மூலையில் உள்ள கவுண்டரைப் பற்றி விசாரித்தாகவும் அவர் அவ்வாறு விசாரிக்க காரணம் சிசிடிவி கெமராக்களில் அகப்படாதிருக்கவே என அவர் தெரிவித்தார்.

அவ்வாறு வருகைத்தந்தவரிடம் அந்த சந்தர்ப்பத்திலும் வெடிப்பொருட்கள் இருந்தனவா என ஆணைக்குழு அதிகாரிகள் வினவினர்.

அதற்கு பதிலளித்த அவர் அந்த சந்தர்ப்பத்திலும் வெடிப்பொருட்கள் அவரிடம் இருந்தாகவும் அவரின் உடலை அல்லது அவரின் பயண பையை பரிசோதிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

பின்னர் குண்டுதாரி ஹோட்டலின் எட்டாவது மாடியில் உள்ள ஒரு அறைக்குச் சென்றதாக அவர் சாட்சியம் வழங்கினார்.

அதே நாளில் இரவு 8.59 அளவில் குண்டுதாரி ஹோட்டலில் இருந்து புறப்பட்டதாகவும் ஹோட்டலுக்கு அவர் கொண்டு வந்த பைக்கு பதிலாக வேறு பையை வெளியில் எடுத்துச் சென்றதை அவதானித்தாகவும் அவர் கூறினார்.

பின்னர் அவர் காலி முகத்திடல் பக்கம் சென்று வாடகை வாகனம் ஒன்றை பெற்று இரவு 9.25 அளவில் கொலன்னாவையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றதாகவும் அவர் கூறினார்.

அவர் கடையில் இருந்து உணவு மற்றும் பானம் வாங்கியதாகவும், கொலன்னாவையில் உள்ள ஜயந்தி மாவத்தையில் உள்ள தனது வாடகை வீட்டிற்குச் சென்றதாகவும் அவர் சாட்சியம் அளித்தார்.

குண்டுதாரி முன்பு கிராண்பாஸ், பாணந்துறை, மட்டக்குளிய மற்றும் தெமடகொடையில் வாடகைக்கு தங்கியிருந்தாகவும் தெரிவித்தார்.

குண்டுதாரி தனது வீட்டில் சுமார் ஒன்றரை மணித்தியாலம் வரை இருந்தாகவும் அதன் பின்னர் முச்சக்கர வண்டி ஒன்றில் கருப்பு கைப்பையுடன் கிங்ஸ்பெரி ஹோட்டலுக்கு திரும்பி வந்ததாகவும் அவர் சாட்சியமளித்தார்.

மேலும் அவர் 2010 ஆம் ஆண்டு முதல் 14 கையடக்க தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்தியதாகவும் அவற்றில் 11 சிம் அட்டைகள் அவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தாகவும் அவர் கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் காத்தான்குடியில் நடந்த ஒரு மோட்டார் சைக்கிள் குண்டுவெடிப்பின் ஒத்திகையிலும் குண்டுதாரி பங்கேற்றதாக குற்ற புலனாய்வுத் துறையின் தலைமை பரிசோதகர் யசஸ் சுவர்ண கீர்த்திசிங்க மேலும் சாட்சியம் வழங்கினார்.