முதல் பெண் போராளி தோழர் ஊர்மிளா.
40 ஆவது நினைவு தினம். விதைப்பு : 19.05.1980

உமாமகேஸ்வரன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் அணிச் செயலாளராகச் செயற்பட்ட வேளையில் அதன் மகளீர் அணியின் செயலாளராக இருந்த ஊர்மிளா என்பவருடன் அறிமுகமாயிருந்தார். ஊர்மிளா மிகுந்த தேசிய உணர்வுகொண்ட போராளி என்பது தவிர அடக்குமுறைகள் மிகுந்த சமூகத்தில் எமக்கு ஆதரவாக கிடைத்த முதல் பெண் என்பது இன்னொரு சிறப்பம்சம் (ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள், கணேசன் ஐயர்). தெல்லிப்பளை வறுத்தலைவிளானை பிறப்பிடமாக கொண்ட தோழர் ஊர்மிளா முதல் ஈழ விடுதலைப் போராளி மட்டும் அல்லாது அவரே முதல் பெண் விடுதலை புலியும் ஆவார்.

1978 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி முருங்கன் காட்டு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த தமிழீழ விடுதலை புலிகளின் மடு முகாமில் வைத்து பொலிஸ் அதிகாரி பஸ்தியாம்பிள்ளை மற்றும் அவருடன் சென்ற அதிகாரிகளான பேரம்பலம், பாலசிங்கம், சாரதி சிறிவர்த்தனா ஆகியோர் கொல்லப்பட்டார்கள். (the team of police officers consisting of Bastianpillai, Perampalan, Police Sergent Balasingham and Police cosatable (Driver) Sriwardene). இந்த கொலையில் இடம்பெற்றவர்களின் பெயர் விபரங்கள் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கடிதம் மூலம் கிடைத்திருந்தது. பொலிசாருக்கு உளவாளியாக செயல்பட்ட இருந்த செட்டி (செல்லக்கிளியின் ஒன்று விட்ட சகோதரர்) என்பவரே இந்த கடிதத்தினை பொலிசாருக்கு அனுப்பி இருந்தார். செட்டி எழுதிய கடிதத்தின் பிரதியினை போலிசாரிடம் இருந்து சாமர்த்தியமாக எடுப்பதற்கு திறமையாகவும் சாதூர்யமாகவும் செயற்பட்டவர் தோழர் ஊர்மிளா ஆகும். ஊர்மிளாவின் பெண் நண்பருக்கு நெருக்கமான ஒருவர் இலங்கை உளவு பிரிவில் வேலை செய்து கொண்டிருந்தார். இவரூடாக இந்த கடிதத்தின் பிரதியியை எடுத்து கொழும்பில் இருந்து சாந்தன் என்பவர் ஊடாக உமாமகேஸ்வரனுக்கு அனுப்பி வைத்திருந்தார். ஆயுத போராட்டத்தின் ஆரம்பகாலமான 1978 இல் தோழர் ஊர்மிளா புலனாய்வில் செயற்படுவதில் திறமையாகவும் துணிகரமாகவும் இருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்த உமாமகேஸ்வரனின் கையொப்பத்துடன் செளியிடப்பட்ட, கொலைகளை உரிமைக் கோரிய முதலாவது துண்டு பிரசுரத்தினை (Comrade Urmila had typed them) தோழர் ஊர்மிளா அவர்களே தட்டச்சு செய்திருந்தார். இலங்கை நாடாளமன்ற கட்டிடத்தில் இருந்த தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவரும் நாடாளமன்ற உறுப்பினருமான அமிதலிங்கம் அவர்களின் செயலாளரின் அலுவலக தட்டச்சு பொறியிலேயே அந்த துண்டு பிரசுரம் தட்டச்சு செயப்பட்டது. பெண்ணடிமை என்பது வேர் ஊண்டி விருச்சமாக இருந்த சமுதாயத்தில், குறிப்பாக 1977 , 1978 ஆம் ஆண்டுகளில் தோழர் ஊர்மிளா துணிவுகரமாக ஒரு விடுதலை போராளியாக முன்வந்து பெண் சமுதாயத்திற்கு ஒரு எடுத்துக் காட்டாக விளங்கினார்.

பெண்ணியம் (Womanism, feminism) என்ற தளத்தில் தத்துவம், இயக்கம் , கோட்பாடு என்பன அதிகம் பேசப்படாத காலகட்டங்களில் தோழர் ஊர்மிளா ஒரு முன்னோடியாக செயற்பட ஆரம்பித்தார். இவைகள் குறித்து அதிகம் புரிதல் இல்லாத காலகட்டங்களில் பெண்கள் சமூகத்தில் தோழி ஊர்மிளா ஒரு ஊக்க விசையினை (Motivation key) தோற்றுவித்து இருந்தார்.

தனது இறுதி காலகட்டத்தில் செங்கமாரி நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவேளை இறந்து போனார். காந்தீய அமைப்பின் ஸ்தாபர்களில் ஒருவரும் வெலிகடைச் சிறைசாலையில் கொல்லப் பட்டவருமான வைத்தியர் இராஜசுந்தரத்தின் மனைவியார் வைத்தியர் சாந்தி அவர்களே இவருக்கு சிகிச்சை வழங்கியிருந்தார். தமிழ் இனத்தின விடுதலைக்காக போராட புறப்பட்ட முதல் பெண் போராளியான தோழர் ஊர்மிளாவின் இழப்பு பெண்ணியத்திற்கு மட்டும் அல்லாது ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்குமே பேரிழப்பாகும். தமிழ் இனத்தின் இருப்பை போன்று தோழர் ஊர்மிளாவின் தியாகம் அணையாத தீபமாக என்றும் ஒளிரும்.

செ.குணபாலன்.
23. மே மாதம். 2020.