வவுனியா சிதம்பரபுரம் பொலிஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்குளம் யுனிட் -2 பகுதியில் கற்குவாரியில் வீழ்ந்து 8 வயதுடைய சிறுவன் மரணமடைந்துள்ளார்.

நேற்று (24) மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த கற்குவாரியில் கல் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் குறித்த கற்குவாரிக்கு சென்ற அச் சிறுவன் கற்குவாரியிலுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் போத்தல் ஒன்றினை கோரியுள்ளார்.

அதன் பின்னர் அச் சிறுவன் கல் அகழ்வு இடம்பெறும் இடத்திற்கு சென்று தவறுதலாக கல் அகழ்வுக்காக வெட்டப்பட்ட குழியினுள் (நீர் நிரம்பிய நிலையில்) வீழ்ந்து நீரில் முழ்கியுள்ளான்.

சென்ற சிறுவனை காணவில்லை என கல் அகழ்வு இடம்பெறும் இடத்திற்கு சென்ற கற்குவாரியிலுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர் சிறுவன் குழியினுள் உயிருக்கு போராடுவதனை அவதானித்து உடனடியாக அயலவர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.

அயலவர்களின் உதவியுடன் சிறுவன் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் சமயத்தில் சிறுவன் உயிரிழந்துள்ளார். சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தாயின்றி இரண்டு வயதிலிருத்து தந்தை மற்றும் மாமாவின் அரவணைப்பில் வாழ்ந்த சிதம்பரபுரம் சிறி நாகராஜா வித்தியாலயத்தில் தரம் 2இல் கல்வி கற்கும் 8வயதுடைய நிரோஐிதன் சிமியோன் என்ற சிறுவனை இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் (23) இச்சிறுவனின் 8வது பிறந்ததினம் கொண்டாடப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சிதம்பரபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.