தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளொட் அமைப்பின் தலைவர் தருமலிங்கம் சித்தார்த்தன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பேட்டி …கேள்வி:- அரசியல் தீர்வு இந்த அரசாங்கத்தினாலேயே சாத்தியப்படும் என்ற  கருத்து முன்வைக்கப்படுகின்றது கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பலதிட்டங்கள் நிறைவேறாத நிலையில் தற்போதைய அரசாங்கத்தினால் இந்த தீர்வு விடயம் சாத்தியப்படுமா?

பதில்:- அரசியல் தீர்வுவரும் என நான் நம்பவில்லை. ஆரம்பத்தில் நல்லாட்சியின் ஜனாதிபதி  மற்றும் பிரதமர் ஆர்வத்துடன் அனைத்து விடயங்களையும் முன்னெடுத்தார்கள். பின்னர் கவனத்தைக் குறைத்துக் கொண்டார்கள். பின்னர் அரசு கலைக்கப்பட்டு பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன.

நாங்கள் பிரச்சினைகளைக் கதைக்காவிட்டால் அரசு அதை சந்தோசமாக விட்டுவிடும். அதை தரவில்லை, ஏமாற்றுகிறார்கள், கிடைக்கவில்லை என்பதற்காக பேசாமல் இருக்க முடியாது. எந்த அரசாக இருந்தாலும் அரசு ஊடாக முயற்சிக்க வேண்டும். இவற்றின் மூலம்தான் நாங்கள் தீர்வைப் பெறமுடியும்  சாத்வீக போராட்டங்கள் மற்றும் ஆயுதப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் முடிவுகள் எட்டப்படவில்லை.

எதிர்வரும் காலங்களில் ஆயுதப் போராட்டத்திற்கான சாத்தியங்கள் இல்லை என்பதுதான் பலருடைய கருத்தும் எனது கருத்துமாகும். சாத்வீகம் மற்றும் சர்வதேச ரீதியாக அழுத்தங்களைக் கொடுப்பதற்கு இந்தியாவால் தான்முடியும்.  தொடர்ந்து கதைத்துக் கொண்டு இருக்கவேண்டும்.

பேசுபொருளாக இருக்காவிடின் தமிழர்களே மறந்து விடுவார்கள். உலகமும் மறந்துவிடும். அதற்கான அழுத்தங்களை நாங்கள் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும்.

கேள்வி: தமிழ் தேசிய கூட்டமைப்பில் எவ்வாறான நிலைப்பாடு காணப்படுகின்றது?

பதில்: தமிழ் தேசிய கூட்டமைப்பிலும் சுமந்திரனின் கருத்துக்கு எதிரான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்று அணிகளாக கருதப்படும் கட்சிகள் அதனைத் தமக்குச் சாதகமாக எடுத்துக் கொள்வதற்கு பல முயற்சிகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். எனவே இந்த சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

இது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரச்சினை அல்ல. தமிழரசுக் கட்சியின் பிரச்சினையாகவே பார்க்கின்றேன்.

கேள்வி:- சுமந்திரனின் கருத்தைப் பலர் எதிர்த்தாலும் ஒரு சில புத்திஜீவிகள் சுமந்திரனின் கருத்து சரியானதெனத் தெரிவிக்கின்றனர். அவர்களின் கருத்துதொடர்பில் நீங்கள் என்ன கருதுகிறீர்கள்.

பதில்: ஆயுதப் போராட்டங்கள் தொடர்பில் பலவிதமான கருத்துக்களை பலர் தெரிவித்து வருகின்றனர். ஆரம்பகாலத்தில் மிகப் பெரும்பான்மையான தமிழ் மக்கள் போராட்டத்தை ஆதரித்திருந்தார்கள். ஆயுதப் போராட்டத்தில் ஏற்பட்ட அழிவுகள் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது  ஏற்பட்ட அழிவுகள் இவற்றைப் பார்க்கின்றபோது இந்த ஆயுதப் போராட்டம் சரியா? தவறானதா என விவாதிப்பதற்கு பலர் இருக்கின்றார்கள். அது தனிப்பட்ட நபர்களின் கருத்து.

கேள்வி:- தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இது குறித்து வெளியிட்ட அறிக்கை குறித்து?

பதில்:- அவர் வெளியிட்டுள்ள அறிக்கை காத்திரமானதாக இல்லை. அது பற்றி பலர் அதிருப்தி வெளியிட்டுள்ளமையும் உண்மை. அவர் சரியான ஒருபதிலை அந்த அறிக்கையில் வெளியிட்டிருக்க வேண்டும். தலைவர் சரியானமுறையில் ஒரு அறிக்கையை வெளியிடவில்லை என்ற அபிப்பிராயம் கட்சியில் இருப்பவர்கள் மாத்திரமன்றி சாதாரண மக்கள் மத்தியிலும் உள்ளது.

கேள்வி:- தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் இவ்விடயத்தைக் கையாண்ட விதம் அது பிளவுபட்டிருப்பதைக் காட்டுகின்றதா?

பதில்:- கருத்துப் பிளவுபட்டிருக்கின்றது. கட்சி பிளவுபடவில்லை. எந்தக்கட்சியாக இருந்தாலும் ஒரேகருத்துடன் இருக்க முடியாது. ஆனால் கட்சிக்குள் ஒற்றுமையைக் கொண்டு வரவேண்டும். இப்படியே கருத்தில் பிளவுபட முடியாது. எனவே கட்சி ஒரு முக்கிய நடவடிக்கையை எடுக்கவேண்டும்.

கேள்வி:- இவ்வாறான கருத்து முரண்பாடுகள் தமிழ் தேசிய கூட்டமைப்பை பிளவுபடுத்துவதற்காக வாய்ப்பாக இருக்குமா அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவுபடுமா?

பதில்:- தமிழ் தேசிய கூட்டமைப்பாக தமிழ் மக்களின் ஒட்டுமொத்த தமிழ் தேசிய போராட்டத்தையும் ஆதரித்த ஒரு கட்சி தமிழ் மக்களின் இலக்கை அடைவதற்காக ஆயுதப் போராட்டம் மட்டுமன்றி சாத்வீக போராட்டங்கள், பேச்சுவார்த்தைகள், பாராளுமன்றம் உள்ளிட்ட அனைத்துவழி முறைகளாலும் நடவடிக்கை எடுத்து வருகின்ற கட்சி என்ற அடிப்படையில் பிளவுபடாது.

இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவுபடுமாக இருந்தால் பலவிடயங்கள் மிகமிக பின்னடைவிற்குப் போய்விடும். பிளவுபட்டு வடக்கில் இருந்து ஒவ்வொரு கட்சியிலும் இருந்து ஒருவர் அல்லது இருவர் பாராளுமன்றத்திற்குப் போவார்களாக இருந்தால் அவர்களை மிக இலகுவாக இந்த அரசுகள் கையாண்டுவிடும்.

ஆகவே மிக கவனமாக கட்சிகள் இருக்கவேண்டும். தமிழ் மக்கள் இருக்க வேண்டும். இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டால் உடனடியாகவே பேசி அதற்குரிய சரியான நடவடிக்கைகள் எடுத்து மக்கள் மத்தியில் உள்ள சஞ்சலங்கள் குழப்பங்களை தீர்க்கவேண்டியது தமிழ் தேசிய கூட்டமைப்பின் கடமை.

கேள்வி:- கொரோனா வைரஸ் தொற்றான இக்காலப்பகுதியில் வடக்கில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் நிவாரணப்பணிகளை முன்னெடுக்காது அரசியலைப் பேசிக்கொண்டிருந்ததாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளார்கள். அதை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா?

பதில்: கொரோனா காலப்பகுதியில் நாங்கள் எவரும் அரசியல் பேசவில்லை. நேரடியாக ஈடுபடவில்லை. இவ்வாறான நடவடிக்கைகளில் வேட்பாளர்கள் ஈடுபடக்கூடாதென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்திருக்கின்றார்கள். அதனால் நாங்கள் எமது நண்பர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஊடாக தேவையறிந்து அந்தந்த மக்களுக்கான உதவிகளை வழங்கினோம்.

மக்கள் நேரடியாகப்படுகின்ற துன்பம். இதற்குள் நாங்கள் அரசியல் செய்யக்கூடாதென்று நிவாரணங்களை வழங்க தயங்கவில்லை. நிவாரணம் தேவை என கோரிக்கைவிடும் பொதுமக்கள் வசிக்கும் பிரதேசங்களுக்குச் சென்று எமது தோழர்கள் ஊடாக நேரடியாக தேவைகளை கேட்டறிந்து உதவிகளை வழங்கினோம்.

கேள்வி:- மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன் புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தனுக்கு ஆயுதப் போராட்டம் தொடர்பில் கதைப்பதற்கு அருகதை இல்லை என தெரிவித்திருக்கின்றார். அவரின் இந்த கருத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா?

பதில்:- எழிலனின் மனைவி என்ற அடிப்படையில் அனந்தி சசிதரன் அரசியல் செய்ய ஆரம்பித்தவர். அவருக்கு போராட்ட  வரலாறு சரியாகத் தெரியாது. என்னுடைய அரசியல் அனுபவம் அவருடைய வயதிருக்காது.

அனந்தி 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது சகோதரியாக மிகவும் நெருக்கமாக பழகிய ஒருவர். இந்த தேர்தல் நேரத்தில் யாராவது சொல்லிக் கொடுத்து யாராவது தூண்டிவிட்டு அந்தப் பதிலைச் சொல்லியிருக்கலாம். மிகவும் திறந்தமனதுடன் கேள்வி கேட்கக் கூடிய ஒருவர் இதை ஏன் கேட்கவில்லை என எனக்குத் தெரியவில்லை.

2013 ஆம் ஆண்டு அனந்திக்காக நான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கின்றேன். அதேபோன்று எனக்காகவும் அனந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கின்றார். அந்தக் காலங்களில் கேட்காத விடயங்களை ஏன் இந்த நேரத்தில் கேட்டிருக்கின்றார் என்புத எனக்குப் புரியவில்லை.

சுமித்தி தங்கராசா