தோழர் பொன்னுதுரை செல்வராஜா (நடேசன்)

33 ஆவது நினைவு தினம்

விதைப்பு : 25.05.1987மலையக பூர்விகத்தினை உடைய வவுனியா சின்னக்குளம் கிராமத்தினை சேர்ந்த தோழர் நடேசன் 1982 இல் தோழர் காத்தானின் (கிருஸ்ணகுமார், முன்னாள் இராணுவ பொறுப்பாளர்) அறிமுகம் ஊடாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இணைந்திருந்தார்.

தோழர் நடேசனும் அவரின் சிறுவர் காலத்து நண்பரான தோழர் நியாசும் (அம்பிகைபாலன், சோதிலிங்கம்) இணைந்து அப்போதைய வவுனியாவின் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் புலேந்திரனுக்கு தண்டணை வழங்குவதற்கான முயற்சிகளை பல தடவைகள் மேற்கொண்டு இருந்தனர். இத்தைகய முயற்சிகளின் பின்னர் 1982 ஆம் ஆண்டு பிற்பகுதியில் புலேந்திரன் அவரின் இல்லத்தில் வைத்து சுட்டுக் கொலை செய்யப் பட்டார். இந்த சம்பவத்திற்கு பின்னர் இவர்கள் இருவரும் பொலிசாரின் தேடுதல் வேட்டைக்கு உள்ளாகியிருந்த நிலையில் நியாசின் நண்பரான தோழர் காத்தான் உடனான தொடர்பின் ஊடாக கழகத்தில் இணைந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து 1983 இல் இந்தியா சென்று ஆயுத பயிற்சி பெற்றுக் கொண்ட தோழர் நடேசன் சிறந்த ஆயுத பயிற்ச்சியாளாராக தன்னை பரினாமித்து கொண்டார். பயிற்சி வழங்குகையில் இவர் மிகவும் கடுமையானான நெறிமுறைகளை கையாளுபவர் என்பதினால் சில தோழர்கள் அவர் மீது தமது ஆட்சேபனைகளை கொண்டிருந்தார்கள். இந்த சம்பவத்தை தேனி முகாமில் பயிற்சி பெற்ற தோழர்கள் மறக்க மாட்டார்கள்.

இத்தகைய ஒரு சம்பவமாக கம்பம் முகாமில் இருந்து தோழர் நடேசன் மற்றும் பெருமாள் வாத்தி இருவரின் அணிவகுப்பில் (Route March) பச்சை காமாச்சி மலைக்கு பயிற்சிக்காக பல தோழர்கள் அழைத்து செல்லப்பட்டு இருந்தார்கள். மலை ஏறும் போது பகல் நேரமாக இருந்தமையினால் சிரமங்கள் அதிகம் இல்லாது பயிற்சி போராளிகள் சுதாகரித்து கொண்டிருந்தார்கள். இறங்கும் வேளை இருட்டி இருந்தமையினால் குழிகள் நிறைந்த பாதையில் இறங்கி வருவது மிகவும் கடினமாக இருந்தது. போராளிகள் அனைவரும் கைகளை கோர்த்தவாறு இறங்கிய போதும் குழிகளுக்குள் வீழ்ந்து எழவேண்டி இருந்தது. காலையில் சென்று இருந்தமையினால் தோழர்கள் பலர் களைப்புற்று இருந்தார்கள். இதனால் தோழர் நடேசன் மீது சிலர் அதிர்ப்திகளை கொண்டிருந்தார்கள். ஆயிரக்கணகான படையனிகளை உடைய அரச படைகளுடன் மோதுவதற்கு மனோபலத்துடன் கூடிய கடுமையான பயிற்ச்சிகள் அவசியம் (intensive training for fighters is essential) என்ற புரிதலை தோழர் நடேசன் கொண்டிருந்ததோடு அதனை கடைப்பிடித்தும் வந்தார்.

1984 இல் மன்னார் மாவட்டத்தின் இராணுவ பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்த தோழர் நடேசன் ரோந்து சென்ற இரானுவத்தினருடன் பல தடவைகள் மோதலில் ஈட்பட வேண்டிய நிர்பந்த்திற்கு உள்ளாகியிருந்தார். குறைவான போராளிகளுடன் நடத்திய சில தாக்குதல்கள் சம்பவங்களில் இரானுவத்தினர் பலத்த சேதங்களோடு பின்வாங்கி இருந்தனர். 1987 ஆம் ஆண்டில் கழகம் வவுனியாவில் மீளவும் தனது வேலை திட்டங்களை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை தோழர் நடேசன் மேற்கொண்டிருந்தார். ஓய்வு இல்லாது செயற்பாடுகளை மேற்கொண்டு இருந்த இவர் மலேரியா காச்சலால் பாதிக்கப்பட்டு வீட்டில் படுத்திருந்தபோது பாசிச புலிகள் அவரை சுட்டுக் கொலை செய்தார்கள்.

என்னை சுடாதே, நான் இறப்பதை காட்டிலும் உயிரோடு இருப்பது உங்களுக்கே நன்மை அதிகமாக இருக்கும் என்று சேகுவரா (Che Guevara) கூறியிருந்தார். அமெரிக்க படையினரால் பயிற்றுவிக்கப்பட்ட பொலிவியா இராணுவம் தன்னை சுற்றிவழைத்திருத்த போதே சேகுவரா (Che Guevara) அவ்வாறு கூறியிருந்தார். தோழர் நசேடன் போன்றவர்கள் உயிரோடு இருப்பது தமக்கே (தமிழர்களுக்கே) பலம் என்பதினை அறிந்துகொள்ள முடியாத புலிகள் தமக்கு இருந்த ஏகப்பிரதிநித்துவ வெறியினானாலும் அரசியல் வங்குரோத்து தனத்தினாலும் அவரை கொன்றொழித்தார்கள்.

கேவலம் சொத்து தேடும் வாழ்க்கை மனிதகுலத்தின் இறுதியான தலைவிதி அல்ல என்று எழுதினார் எங்கெல்ஸ ( Friedrich Engels). தாம் தேர்ந்தெடுக்கும் பாதையின் வெற்றியானது தனது வாழும் காலத்தில் நிறைவேறும் என்ற எந்த உத்தரவாதம் இல்லாத நிலையில் போராடியவர்களே போராளிகள் ஆகும். எதிர்கால சந்ததியினர் சுதந்திரம் என்ற சுவாசக் காற்றினை சுவாசிக்க வேண்டும் என்பதற்காக தமது சொந்த வாழ்க்கையை பலியிட துணிந்தவர்களே விடுதலை வீரர்கள் ஆகும். எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்று பாரதி பாடினான், அத்தனை இன்பங்களோடு இயற்கையின் படைப்புகளுடன் இசைந்து தனது இனம் இன்புற்று வாழவேண்டும் என்பதற்காக தமது ஆசை பாசங்களை தியாகம் செய்த வீரர்களில் ஒருவராக தோழர் நடேசன் திகழ்ந்தார். ஏனையோரின் மதிப்பிற்கும் மரியாதக்கும் உரியவராக தோழர் நடேசன் வாழ்ந்ததோடு, தான் சார்ந்த இனத்திற்காக தனது உயிரை தியாகம் செய்திருந்தார். எமது மக்களின் மனதில் அவர் என்றும் வாழ்வார்.

செ.குணபாலன்.
25.05.2020.