இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களுடைய இழப்பு மலையக மக்களுக்கு ஒரு பேரிழப்பாகும். இவருடைய பேரனார் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் காலம் தொட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையகத்தில் ஒரு மாபெரும் தொழிற்சங்கமாகவும் அத்துடன் ஒரு அரசியல் கட்சியாகவும் இருந்து வருகிறது.

சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் மறைவிற்குப் பின்னர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களுடைய தலைமையிலும் கூட அது ஒரு மிகப் பலம் வாய்ந்த அமைப்பாகவே இருந்து வருகிறது.

அத்துடன் வடகிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினையில் மிகுந்த அக்கறை கொண்டு 70களில் முதல் முதலாக தமிழர் விடுதலைக் கூட்டணி ஆரம்பித்த போது சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா அவர்கள் அதன் தலைவர்களுள் ஒருவராக இருந்தார்.

அவரது மறைவிற்கு பிறகு ஆறுமுகம் தொண்டமான் அவர்களும் ஈழத் தமிழர் பிரச்சினையில் மிகவும் அக்கறையாக செயற்பட்டார்.

ஈழத் தமிழர் பிரச்சினை சம்பந்தமாக ஐரோப்பிய நாடுகளிலே நடைபெற்ற பல கூட்டங்களில் அவருடன் நான் கலந்து கொண்டிருந்தபோது தமிழர் பிரச்சினை தொடர்பில் அவர் ஆணித்தரமான கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

அவருடைய இழப்பு தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் ஒரு பேரிழப்பாகும்.

அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் எமது கட்சி சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தர்மலிங்கம் சித்தார்த்தன்
தலைவர்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி
27.05.2020.