முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு தெற்கு பகுதியில் காணி ஒன்றினை துப்பரவு செய்யும் போது கைக்குண்டுகள் சில இனம் காணப்பட்டுள்ளதாக காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.மூங்கிலாறு தெற்கு பகுதியில் விவசாய காணியில் போரின் போது கைவிடப்பட்ட நீண்ட மண் அரண் காணப்பட்ட நிலையில் அதனை அகற்றி தருமாறு கோரிக்கை விடுத்தபோதும் இதுவரை அகற்றப்படாத நிலையில் காணியின் உரிமையாளர் கனரக இயந்திரம் கொண்டு குறித்த மண் அரணினை அகற்றி காணியினை சீர்செய்யும் போது மண்ணுக்குள் புதைக்கப்பட்ட சில கைக்குண்டுகள் இனம் காணப்பட்டுள்ளன.

இச்சம்பவத்தினை தொடர்ந்து காணியின் துப்பரவு பணிகள் கைவிடப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பில் படையினர் பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

குறித்தஇடத்திற்கு விரைந்த படையினர் கைக்குண்டுகள் இருக்கும் பகுதியினை அடையாளப்படுத்திவிட்டு சென்றுள்ளார்கள்.

இது தொடர்பில் சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலிசார் இடத்தினை பார்வையிட்டு அடையாளப்படுத்தி நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்து குறித்த வெடிபொருட்களை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.