அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத் தலைநகரான மினியாபொலிஸ் நகரில் கருப்பினத்தை சேர்ந்த ஒருவர் போலீஸாரின் பிடியில் உயிரிழந்ததால் அங்கு மூன்று நாட்களாக கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஒரு காருக்கு அடியில் ஒரு மனிதர் கைவிலங்கிட்டு இருப்பது போன்றும் அவரின் கழுத்தின் மேல் தனது முழங்காலை வைத்து காவலர் ஒருவர் அழுத்துவதும் போன்றும் ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது.

 

‘என்னால் மூச்சு விட முடியவில்லை’ – ஜார்ஜ் ஃப்ளாய்ட்
அந்தக் காணொளியில் போலீஸாரின் பிடியில் இருந்தவரின் பெயர் ஜார்ஜ் ஃப்ளாய்ட். அவருக்கு வயது 46.
அந்தக் காணொளியில் ஜார்ஜ் ‘என்னால் மூச்சு விட முடியவில்லை; தயவு செய்து என்னைக் கொல்லாதீர்கள்’ என்று கூறுகிறார்.

அமெரிக்காவில் கருப்பினர்த்தவர்கள் போலீஸாரால் கொல்லப்படுவது குறித்து ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில், இந்த சம்பவம் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு போலீஸாரின் மீதும் கொலைக்குற்றம் சுமத்தப்பட வேண்டும் என ஜார்ஜின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். விசாரணை அதிகாரிகள் ஆதாரங்களை சேகரித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
அமெரிக்கா முழுவதும் தீவிர போராட்டம்
ஜார்ஜ் உயிரிழந்த இடத்திற்கு அருகில் உள்ள காவல் நிலையம் ஒன்றை சூழ்ந்தனர் போராட்டக்காரர்கள். அவர்களை கண்ணீர் புகை குண்டுகளையும், ரப்பர் குண்டுகளையும் கொண்டு போலீஸார் கலைக்க முயன்றனர்.
அமெரிக்காவின் நியூயார்க், லாஸ் ஏஞ்சலஸ், சிகாகோ, டென்வர், ஃபீனிக்ஸ் மற்றும் மெம்ஃபிஸ் ஆகிய நகரங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மினியோபொலிஸின் மேயர் ஃப்ரே புதன்கிழமையன்று, சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கிரிமினல் குற்றம் பதியப்பட வேண்டும் என தெரிவித்தார். காணொளியில் தெரிந்த போலீஸ் நபர் ஒருவரும் மற்ற மூன்று போலீஸ் நபர்களும் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.

சிஎன்என் தொலைக்காட்சியிடம் பேசிய ஜார்ஜின் சகோதரர், ‘எனது சகோதரர் திரும்பி வரப்போவது இல்லை. எங்களுக்கு நீதி வேண்டும்,’ என்று தெரிவித்தார்.
கண்ணீர் மல்கப் பேசிய அவர், ‘பட்டப்பகலில் எனது சகோதரரை கொன்ற போலீஸார் கைது செய்யப்பட வேண்டும்’ என்றும் ‘கருப்பினத்தவர்கள் தொடர்ந்து கொல்லப்படவதை பார்த்து சோர்ந்து போய்விட்டேன்,’ என்றும் தெரிவித்தார்.