எதிர்வரும் 8 ஆம் திகதி திங்கட் கிழமை முதல் சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு பொதுப் போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவர போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

இன்று முற்பகல் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் குறித்த அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, எதிர்வரும் தினங்களில் பொதுமக்களின் நடத்தை, கொவிட் 19 தொற்று நிலைமை மற்றும் சுகாதார பிரிவினால் பெற்றுக் கொடுக்கப்படும் ஆலோசனைகளை கருத்திற் கொண்டு எதிர்வரும் திங்கட் கிழமை (08) முதல் பொது போக்குவரத்து சேவையை வழமைப் போல் நடாத்திச் செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்து சேவையை வழமைப் ​போல் முன்னெடுத்துச் செல்லும் போது ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு முகங்கொடுப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதால் அதற்காக பேருந்து பற்றாக்குறை பிரச்சினை தொடர்பில் இதன்போது விசேட அவதானம் செலுத்தப்பட்டதாக போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, தற்போது காணப்படும் தனியார் மற்றும் இ.போ.ச பேருந்துகள் முழுமையாக சேவையில் ஈடுபடுத்தபடவுள்ள நிலையில் பாடசாலை சேவை பேருந்து, சுற்றுலா மற்றும் யாத்திரைகளுக்காக பயன்படுத்தப்படும் பேருந்துகள் போன்று பதிவுக்காக காத்திருப்பு பட்டியலில் உள்ள அனைத்து பேருந்துகளையும் பயணிகள் போக்குவரத்துக்காக ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த பேருந்துகளை தற்காலிகமாக பதிவு செய்யும் நடைமுறை நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.