எவன்காட் நிறுவனத்தை தன்னிச்சையான முறையில் கையகப்படுத்தியதன் காரணமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து  அதன் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியால் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவால் 17 பேருக்கு அழைப்பாணை வௌியிடப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர், முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவரத்ன உள்ளிட்ட 17 பேர் எதிர்வரும் 17 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அதன்படி, முன்னாள் கடற்படை தளபதி ரவிந்திர விஜேகுணரத்ன, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித்த சேனாரத்ன, பாட்டளி சம்பிக்க ரணவக்க, அர்ஜுன ரணதுங்க, அனுர குமார திஸாநாயக்க, ஜனாதிபதி சட்டத்தரணி டளஸ் விக்கிரசிங்க, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியவர்களுக்கு இவ்வாறு அழைப்பாணை வௌியிடப்பட்டுள்ளது.

மேலும், முன்னாள் ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.ஏ.டி.குணவர்தன, துதினன் கொமாண்டர் டபில்யூ.எச்.பீ.வீரசிங்க, ரியர் அட்மிரல் ஜே.ஜே.ரணசிங்க, ரியர் அட்மிரல் நிலந்த ஹீனடிகல, ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, காலி துறைமுக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இந்துக டி சில்வா, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகர் அலுத்கே செனரத் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் லசந்த ரத்நாயக்க, வசந்த நவரத்ன பண்டார, அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக பண்டார ஆகியோருக்கு இவ்வாறு அழைப்பாணை வௌியிடப்பட்டுள்ளது.