பிரதமருடனான கலந்துரையாடலில் தமது கோரிக்கைக்கான தீர்வு கிட்டியதால் பணிப்பகிஷ்கரிப்பைக் கைவிடுவதாக துறைமுக தொழிற்சங்கம் நேற்று அறிவித்தது. கார்ல்டன் இல்லத்தில் பிரதமருடன் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக இலங்கை சுதந்திர ஊழியர் சங்கத்தின் தலைவர் பிரசன்ன களுதரகே தெரிவித்தார்.கொழும்பிற்கு கொண்டுவரப்பட்டுள்ள மூன்று பாரந்தூக்கிகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் கிழக்கு முனையத்தில் பொருத்துமாறு இலங்கை துறைமுகங்கள் அதிகார சபையின் அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதற்கமைய, தமது கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தமது எதிர்ப்பு நடவடிக்கைகளை முழுமையாகக் கைவிடுவதாகவும் இலங்கை சுதந்திர ஊழியர் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் செயற்பாடுகள் துறைமுக அதிகார சபையின் மூலம் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஊழியர்கள் சிலர் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். இதேவேளை, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் மற்றும் கொள்கலன் முனையம் தொடர்பில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதியினால் ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இக் குழுவின் தலைவராக துறைமுகங்கள் அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்ன நியமிக்கப்பட்டுள்ளார். தொழில்துறை ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளர் ஆ.P.னு.ரு.மு.மாபா பத்திரண, வீதி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் R.W.R. பிரேமசிறி, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா மற்றும் துறைமுக அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்நாயக்க ஆகியோர் இந்தக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழு 45 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.