(எம். நியூட்டன்)

தமிழ் மக்களின் உரிமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைவிடாது. உரிமைக்காக தொடர்ந்தும் போராடிக்கொண்டே இருக்கும். மக்கள் தங்களுடைய ஜனநாயகக் கடமைகளை முறையாகச் செய்ய வேண்டும் என கூட்டமைப்பின் வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். சுன்னாகத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,தேர்தல் என்பது மக்கள் ஒவ்வொருவரதும் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பமாகும். இந்தத் தேர்தல் முக்கியமான ஒன்றாகும். 2015 ஆம் ஆண்டு புதிய அரசைக் கொண்டுவருவதற்கு நாங்கள் முக்கிய பங்காற்றினோம். இந்தப் பங்குபற்றலை கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு முண்டு கொடுத்தது என்று கூறுகின்றார்கள். அவ்வாறு இல்லை. கடந்த ஆட்சியில் ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்தன.

எமது மக்கள் எமக்குக் கொடுத்த ஆணையின் பிரகாரம் எங்கள் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக நாங்கள் ஒருமித்துச் செயற்பட்டோம். அரசியல் தீர்வு ஒன்றை அடைவதற்காக அந்த முயற்சியில் நாங்கள் ஈடுபட்டோம். கடந்த காலங்களில் ஆட்சியில் அமர்ந்த அரசாங்கம் ஒரு தீர்வு முயற்சியில் ஈடுபடும்போது எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் அதனை எதிர்ப்பதில் குறியாக இருந்து செயற்பட்டார்கள். இது வரலாற்று உண்மை.

அந்த எதிர்ப்பை இல்லாது செயற்வதற்காக 2015 ஆம் ஆண்டு சிறந்த சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தது. கிடைத்த சந்தர்ப்பத்தை நாங்கள் பயன்படுத்தினோம். பாராளுமன்றம் அரசியல் அமைப்புச் சபையாக மாற்றம் பெற்று அரசியல் அமைப்பில் ஒரு மாற்றத்தைச் செய்வதற்காக இயலுமான வரை முயற்சியை மேற்கொண்டு வரைபு வரை சென்று இடைக்கால அறிக்கை முன்வைக்கப்பட்டது. அதனோடு இணைந்ததாக பல இணைப்புக்களும் முன்வைக்கப்பட்டன.

கடந்த காலங்களில் அரசியல் அமைப்பு முயற்சிகளை முன்வைக்கின்றபோது தமிழர் தரப்புத்தான் எதிர்க்கின்றது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால் இம்முறை இத்தகைய குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படவில்லை. கடந்த ஆட்சியில் நாங்கள் இணைந்தே செயற்பட்டோம். எங்கள் மக்களின் ஆணைக்கேற்பவே நாங்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டோம். எங்களைச் சந்திக்கின்ற சர்வதேச தரப்புக்களும் இணைந்து செயற்படுங்கள் என்பதையே வலியுறுத்தியிருந்தார்கள்.

(நன்றி- வீரகேசரி 04.07.2020)