செய்திகள்:


1. தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் வன்முறை, அரச சொத்தக்களை ஆக்கிரமித்தல், சட்டவிரோதமான முறையில் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்தல் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் இதுவரையில் 1255 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் தேர்தல் சட்டங்களை மீறிய வேட்பாளர்கள் இருவர் உட்பட 119 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இன்று காலை புத்தளம் மதுரங்குளி பகுதிக்கு மேற்பார்வை விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட வேட்பாளர் ஏ.எச்.எம். ரியாஸின் ஏற்பாட்டில் மதுரங்குளி வாராந்த சந்தைக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், பிரதேச, மாவட்ட அமைப்பாளர்கள் பங்கேற்றனர்.

3. 2020 ஆகஸ்ட் 5ம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான கால எல்லையை ஒரு மணி நேரத்தால் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் காலை 7 மணி முதல் பிற்பகல் 4 மணி வரையில் வாக்களிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால எல்லையை காலை 7 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை வரையில் நீடிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

4. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் காணியொன்றில், மனித எச்சங்கள் இனங்காணப்பட்டதை அடுத்து, நாளை நீதிமன்ற அனுமதியுடன், அப்பகுதியில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 40 ஏக்கர் கொண்ட இக்காணியை, நேற்று முன்தினம் கனரக இயந்திரத்தைக் கொண்டு துப்புரவு செய்யும் போது, நிலத்துக்கடியில், மனித எச்சங்கள் இனங்காணப்பட்டுள்ளன.

5. இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. மாலைத்தீவில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2077 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1917பேர் பூரணமாக குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர்.

6. திருமண வைபவங்களில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வைபவ மண்டபங்களில் உள்ள ஆசன எண்ணிக்கையில் 50 சதவீதமானோர் அல்லது ஆகக்கூடிய வகையில் 300 பேருக்கு (மணமகன் உள்ளிட்ட குழு, மணமகள் உள்ளிட்ட குழு, இசைக்குழு மற்றும் ஏனைய கலைஞர்கள் அடங்கலாக) குறைந்த எண்ணிக்கையில் திருமண வைபவத்தில் கலந்து கொள்வதற்கு 2020 ஜுலை 6ஆம் திகதி தொடக்கம் அனுமதி வழங்கப்படுகின்றது. இதே போன்று திருமண வைபவத்தில் கலந்து கொள்வவோருக்கு இடையில் 1 மீற்றர் இடைவெளியை கடைபிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

7. வவுனியா – குருமன்காடு சந்திக்கு அண்மையில், இன்று காலை, திடீரென புதிதாக இராணுவச் சோதனை சாவடியொன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன்போது, அவ்வீதியால் பயணிக்கும் சில வாகனங்கள் சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. சனநடமாட்டம் அதிகமுள்ள குருமன்காடு பகுதியில், இவ்வாறு இராணுவச் சாவடி அமைக்கப்பட்டுள்ளமையால், அவ்வீதி வழியாகப் பயணிக்கும் பொதுமக்கள், பல்வேறு அசோகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.