1. கொழும்பு வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

2. இன்று ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இலங்கையில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2078ஆக உயர்வடைந்துள்ளது.

3. 11 சுகாதார நிபந்தனைகளுக்கு அமைவாக பல்கலைக்கழகங்களை திறப்பது குறித்து துணைவேந்தர்கள் இன்றுமுதல் தீர்மானிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

4. வெளிநாடுகளில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டிற்குள் வரும் நபர்களை கைது செய்தல் மற்றும் கடல் எல்லைகளை பாதுகாத்தல் தொடர்பிலான விஷேட வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். விஷேடமாக இந்தியாவில் இருந்து கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் கடல் மார்க்கமாக வடக்கு பிரதேசங்களுக்கு வரும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

5. கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்குள்ளான மேலும் 3 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, 888 கடற்படையினர் இதுவரையில் பூரணமாக குணமடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

6. நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2078 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1917 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர்.

7. பதவிக் காலத்தில் பயன்படுத்திய வாகனங்களை இதுவரை அமைச்சிடம் கையளிக்காத இராஜாங்க அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. கையளிக்கப்படாத 11 வாகனங்கள் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கிய தகவல்களுக்கு அமைய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

8. இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலையும், அம்பலாங்கொட சாலையும் இணைந்து காங்கேசன்துறை முதல் மஹரகம வைத்தியசாலை ஊடாக காலி வரையான புதிய பஸ் போக்குவரத்து சேவையை நேற்று ஆரம்பித்துள்ளனர். புதிய பேருந்து நேற்று இரவு 7.15 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து உத்தியோகபூர்வமாக பயணமானது. மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு செல்வோரின் தேவை கருதியே பிரதானமாக இவ்பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.